
அமோக வரவேற்பு
லைப் ஆப் மிருதுளா என்ற திரைப்படம், இம்மாதம் 13ம் தேதி திரைக்கு வந்தது. படத்துக்கு அமோக வரவேற்பு கிடைத்ததால், படக்குழுவினர் குஷி அடைந்துள்ளனர். இந்த படத்தை தயாரித்த மதன்குமார், நாயகனாக நடித்துள்ளார்.
படக்குழுவினர் கூறுகையில், ''மாறுபட்ட கதை கொண்டது. மிருதுளா என்ற பெண்ணின் வாழ்க்கையில், மூன்று வித்தியாசமான சம்பவங்கள் நடக்கின்றன. எதிர்பாராமல் எதிர்கொள்ளும் சவால்களை அவர் எப்படி சமாளிக்கிறார் என்பதை, பல திருப்பங்களுடன் கூறியுள்ளோம். திரில்லிங் கதை கொண்டதாகும். பூஜா லோகாபுரா நாயகியாக நடித்துள்ளார்,'' என்றார்.
பெயர் மாற்றம்
மூத்த நடிகர் சசிகுமாரின் மகன் ஆதித்யா நாயகனாக அறிமுகமாகும் படத்துக்கு, ராஷி என பெயர் சூட்டப்பட்டுள்ளது. சமீபத்தில் படத்தின் டைட்டில் வெளியிடப்பட்டது. இது குறித்து, ஆதித்யாவிடம் கேட்ட போது, ''இந்த படத்தின் கதை, மிகவும் நன்றாக உள்ளது. என் பிறந்த நாள் அன்றே, படத்தின் டைட்டில் வெளியிடப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது.
''இதுவரை அக்ஷித் என்றிருந்த என் பெயரை, தற்போது ஆதித்யா என, மாற்றிக்கொண்டேன். இனி என்னை அனைவரும் ஆதித்யா சசிகுமார் என்றே அழைக்க வேண்டும். தற்போது நான் நடிக்கும் படம், காதல் கதையாகும். சமிக்ஷா நாயகியாக நடிக்கிறார்,'' என்றார்.
தயாரித்து இயக்கம்
மருத்துவ அறிவியல் கதை உள்ள, கன்டெய்னர் படத்தின் டிரெய்லர், சமீபத்தில் வெளியானது. இந்த படத்தை நரசிம்ம மூர்த்தி இயக்குவதுடன், தயாரிப்பு பொறுப்பையும் ஏற்றுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ''படம் சென்சார் முடிந்து, திரைக்கு வர தயாராகிறது. தசரா நேரத்தில் திரையிட திட்டமிட்டு உள்ளோம்.
''நான் அறிவியலில் பட்டம் பெற்றுள்ளதால், மருத்துவ அறிவியல் தொடர்பான கதையை தேர்வு செய்து கொண்டேன். சாதாரண தொழிலாளிக்கும் மதிப்பிருக்கும் என்பதை, படத்தில் கூறியுள்ளேன். தத்தாத்ரேய பூஜாரி, புண்யா கவுடா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பெங்களூரு, மங்களூரில் படப்பிடிப்பு நடத்தினோம்,'' என்றார்.
உயிரூட்டும் இசை
கேரளாவில் களறி வித்தை, மிகவும் பிரபலம். இதை மையமாக வைத்து கன்னடத்தில், லுக் பேக் என்ற பெயரில் திரைப்படம் தயாராகிறது. கதை குறித்து படக்குழுவினர் கூறுகையில், 'இந்த படத்தை ரஞ்சன் முலாரத் நடித்து, இயக்கியுள்ளார். மூன்று ஆண்டுகளுக்கு முன்பே படத்தை துவக்கினோம். பல பிரச்னைகளை கடந்து திரைக்கு கொண்டு வருகிறோம். படத்தின் களறி கலைதான் ஹீரோ.
'இந்த கலையில் பத்மஸ்ரீ விருது பெற்ற 84 வயதான மீனாட்சி அம்மாவும், படத்தில் நடித்துள்ளார். படத்துக்கு இசையே உயிரூட்டுகிறது. ஹம்சலேகா உட்பட நான்கு வெளிநாட்டு இசை அமைப்பாளர்கள் படத்தில் பணியாற்றுகின்றனர். நாயகியாக உபாசனா குர்ஜன் நடித்துள்ளார். கிளைமாக்ஸ் வித்தியாசமாக இருக்கும். இன்றைய பெண்கள் தங்களின் தற்காப்புக்கு களறி கற்க வேண்டும். கர்நாடகா, கேரளாவில் இன்று வெளியாகிறது' என்றனர்.
மூன்று ஹீரோக்கள்
பிரபல இசை அமைப்பாளர் அர்ஜுன் ஜன்யா, இயக்குனராக மாறியுள்ளார். தன் முதல் படத்திலேயே, சிவராஜ்குமார், உபேந்திரா, ராஜ் ஷெட்டி என, மூன்று ஹீரோக்களை ஆட்டி வைக்கிறார். படத்துக்கு 45 என, பெயர் சூட்டப்பட்டுள்ளது. அர்ஜுன் ஜன்யா கூறுகையில், ''2023 ஏப்ரலில் படப்பிடிப்பு துவங்கியது. பெங்களூரின் கன்டீரவா ஸ்டூடியோவில் கிளைமாக்ஸ் காட்சிகள் படமாக்கப்படுகிறது. ரவி வர்மா சண்டை காட்சிகளை வடிவமைத்துள்ளார். ஒரு பெரிய தத்துவத்தை எளிமையாக கூறுகிறோம். சிவராஜ்குமார், உபேந்திராவின் முதல் போஸ்டர் ஏற்கனவே வெளியிட்டுள்ளோம், என்றார்.
மாறுபட்ட கதாபாத்திரம்
சின்னத்திரை, வெள்ளித்திரை என, இரண்டிலும் ஜொலிப்பவர் நடிகை ஜோதிராய். இவர் வினு பளஞ்சா இயக்கிய 'பந்தே பர்தாவ காலா' என்ற தொடரில் நடித்து, ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர். தமிழ், தெலுங்கு தொடர்களில் நடித்தார். அதன்பின் வெள்ளித்திரையில் நுழைந்து, சப்ளையர் சங்கர், தியா என்ற படங்களில் நடித்தார்.
தற்போது நைட் ரோடு என்ற படத்தில் நாயகியாக நடிக்கிறார். படத்தின் கதை குறித்து, ஜோதிராயிடம் கேட்ட போது, ''மூன்று ஆண்டுக்கு முன், கோபால் ஹளேபாள்யா கூறிய கதை பிடித்ததால், நடிக்க சம்மதித்தேன். இதில் நான் நடிகர் தர்மாவின் மனைவி கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். என்னுடையது மாறுபட்ட கதாபாத்திரம். தற்போது நான் கன்னடத்தை விட, தெலுங்கில் அதிக பிசியாக இருக்கிறேன்,'' என்றார்.

