ADDED : அக் 27, 2024 03:19 AM

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் வற்றாத ஜீவநதியாக சலசலத்து ஓடிக் கொண்டிருக்கும் துங்கா நதிக்கரையில் அமைந்திருக்கிறது, ஸ்ரீ ரிஷ்ய
சிருங்ககிரி என்றும், சிருங்ககிரி என்றும் அழைக்கப்படும் சிருங்கேரி திருத்தலம்.
இத்தலம் ராமாயணக் காலத்திற்கும் முற்பட்டது.
அக்கால கட்டத்தில் விபாண்டகர்எனும் பெரும் தவ வலிமை பூண்ட முனிவர், இப்பிரதேசத்தில் வசித்து வந்தார்.அவர் ஒரு நாள், கானகத்தின் வழியாக சென்று கொண்டிருக்கும்போது அங்கே ஓர் அழகிய ஆண் குழந்தை கேட்பாரின்றி கிடப்பதை கண்டார். அதன் மேல் பரிவு கொண்ட அவர், அக்குழந்தையை தன்னுடன் எடுத்து வந்து விட்டார்.
தெய்வீக ஒளியுடன் விளங்கிய அக்குழந்தையின் தலையில், ஒரு சிறிய கொம்பு போன்ற வளர்ச்சி இருப்பதைக் கண்ட விபாண்டகர், அக்குழந்தைக்கு ரிஷ்ய சிருங்கர் என பெயர் சூட்டி வளர்த்துவரலானார்.
விபாண்டகரின் நேரடி கண்காணிப்பில் வேத சாஸ்திர கல்வியை கற்று தவ வலிமையுடன் வளர்ந்து வந்த ரிஷ்ய சிருங்கர், பழங்கள் மற்றும் கிழங்கு வகைகள் போன்ற இயற்கை உணவை தவிர, வேறு உணவுகள் எதையும் அறிந்தாரும் இல்லை. அவரது பிரம்மச்சரிய நெறி மிக மிக உயர்ந்துஇணையற்று விளங்கியது.
அக்கால கட்டத்திலேயே ரோமபாதர் எனும் அரசர், தம் நாட்டில்நீண்ட காலமாகவே மழை
பொழியாமல் பெருவறட்சி நிலவுவதை கண்டு மிகவும் கவலை கொண்டார். அதுபற்றி தம் மதியூக அமைச்சர்களிடம் ஆலோசனை செய்தார்.
அவர்கள், அரசருக்கு ரிஷ்ய சிருங்கரை பற்றி எடுத்துரைத்து, 'இணையற்ற பிரம்மச்சாரியான அவரது பாதம் அந்நாட்டில்பட்டால், உடனடியாக மழை பொழியும்' எனக் கூறினர்.
ரிஷ்ய சிருங்கரின் பாதம் பட்டதுதான் தாமதம், பெருமழை பெய்யத் துவங்கி விட்டது;
மக்களும் பெருமகிழ்ச்சிஅடைந்தனர்.
அரசரும், தம்மகளையே ரிஷ்ய சிருங்கருக்கு மணமுடித்தும் வைத்து விட்டார்.கானகத்தில், ஒரு சிறுகுன்றின் மீது அமர்ந்து நீண்ட தவத்தில்ஈடுபட்ட விபாண்டகர்,தம் உடலை நீத்து பெரும்ஒளி வடிவில் அக்குன்றில்இருக்கும் சிவலிங்கத்தினுள்ளே ஐக்கியம் ஆனார்.
சிருங்கேரியில், இன்றும் அக்குன்று உள்ளது. அம்மஹாமுனிவர் ஐக்கியமான லிங்கம் உள்ள ஆலயமே, ஸ்ரீ மலஹானி கரேசுவரர் ஆலயம் என்ற பெயருடன் விளங்கி வருகிறது.
ரோமபாதரின் நாட்டில் இருந்த ரிஷ்ய சிருங்கரின் மகிமைகளை அறிந்த அண்டை நாட்டு அரசனான தசரத மகாராஜா, அவரைத் தம் அயோத்தி நாட்டிற்கு வருகை புரிந்து தமக்கு சத்புத்திரர்கள் பிறக்கும் வகையில், யாகம் ஒன்றை நடத்திக்கொடுத்து, ஆசீர்வதிக்கும்படி வேண்டி கேட்டுக் கொண்டார்.
அதற்கிணங்கி, ரிஷ்ய சிருங்கரும் அப்படியே செய்து கொடுத்தார். அதன் விளைவாக ஸ்ரீ ராமபிரான் முதலான தெய்வீக புத்திரர்கள் தசரதருக்கு கிடைக்க பெற்றனர் தம் புவியுலக வாழ்நாளின் இறுதியில், தவம் செய்த இடத்தில் இருந்த சிவலிங்கத்திலேயே ஒன்றி மறைந்தார் ரிஷ்ய சிருங்கர்.
அந்த சிவலிங்கம் இன்றும் சிருங்கேரியிலிருந்து கிட்டத்தட்ட 10 கி.மீ., தொலைவில் உள்ள கிக்கா எனும் இடத்தில் ஸ்ரீ ரிஷ்ய சிருங்கேஸ்வரர் எனும் பெயருடன் மிக அழகானதொரு ஆலயத்தில் வீற்றிருக்கிறது. அச்சிவலிங்கத்தின் மேல் ஒரு கொம்பு இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த ஆலயத்திற்கு தனிசிறப்பு ஒன்று உள்ளது. நாட்டில் எங்கேனும் மழை பொய்த்து விட்டால், அப்பகுதியைசேர்ந்த பக்தர்கள் சிருங்கேரிஜகத்குருவிடம் முறையிடுவர்.
குருநாதரும் இந்த ஆலயத்தில்உள்ள ஸ்ரீ ரிஷ்ய சிருங்கேசுவரருக்கு பூஜை செய்யும்படி பணிப்பார். உடனடியாக அப்பிரதேசத்தில் மழை பெய்து விடும். எங்கேனும் பெருமழை பெய்ய துவங்கி நிற்கவே இல்லை என்றால், இதே ஆலயத்தில் உள்ள ஸ்ரீ ஆஞ்சனேயருக்கு பூஜை செய்வர்; மழையும் நின்று விடும்.
ஸ்ரீ ரிஷ்ய சிருங்கர் வாழ்ந்தபிரதேசமே, ரிஷ்ய சிருங்ககிரி என அழைக்கப் பெற்று பின் சிருங்ககிரி எனவும் தற்போது சிருங்கேரிஎனவும் மருவித் திகழ்கிறது.