கமர்ஷியல் தெருவில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு வியாபாரம் மந்தம்
கமர்ஷியல் தெருவில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு வியாபாரம் மந்தம்
ADDED : டிச 18, 2024 10:32 PM

சிவாஜிநகர்; பெங்களூரில் வணிக நடவடிக்கைகளின் முக்கிய மையமான, சிவாஜிநகர் கமர்ஷியல் தெருவை இணைக்கும் மெயின் கார்டு கிராஸ் சாலையில், ஒயிட் டாப்பிங், பைப் லைன் பதிக்கும் பணிகள் மெத்தனமாக நடப்பதால் கிறிஸ்துமஸ், புத்தாண்டு வியாபாரத்தில் மந்த நிலை நிலவுகிறது.
சிவாஜிநகர் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட மெயின் கார்டு சாலையில் ஜவுளி, பாதணிகள், பெண்கள் அணிகலன்களுக்கான கடைகள் உள்ளன. இந்த சாலையில் லாரிகள், பி.எம்.டி.சி., பஸ்கள், உட்பட இருசக்கர வாகனங்கள் அதிகளவு செல்கின்றன.
விபத்துகள்
சாலையின் ஒருபுறம் தோண்டப்பட்டு, பிரதான சாலையின் முன், மண் மற்றும் கழிவுகள் கொட்டப்பட்டுள்ளன. சாலைப் பணி நடந்து வருவதால், தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சாலையில் உள்ள பள்ளங்களால் தினமும் விபத்துகள் ஏற்படுகின்றன.
இச்சாலையில் தினமும் நுாற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. சாலை தோண்டப்பட்டதால் வியாபாரிகள், பயணியர் மீது துாசி படிகின்றன. மோமான நிலையில் சாலை இருப்பதால், வியாபாரம் பாதிக்கப்படுகிறது. வாடிக்கையாளர்கள், வியாபாரிகள், உள்ளூர் வாசிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
மந்தகதி
இந்த பணி எப்போது முடியும் என மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டால், குடிநீர் வாரியத்தின் மீது குறை கூறுகின்றனர். சாலை தோண்டப் பட்டு பெரிய குடிநீர் குழாய் பைப்புகள் பதிக்கப்பட்டு வருகின்றன. ஆனால் பணிகள், மந்தகதியில் நடந்து வருகின்றன.
கடைக்காரர்கள் கூறியதாவது:
காலாட்படை என்ற ஆட்லரி சாலையில் இருந்து வரும் வாகனங்கள், முக்கிய சாலைகள் வழியாக கமர்ஷியல் தெருவை இணைக்கும். ஒவ்வொரு முறையும் வாகனங்கள் செல்லும் போது துாசி படிகிறது. இதை சுத்தப்படுத்துவதற்காகவே, தனி நபர்களை நியமித்துள்ளோம்.
வாடிக்கையாளர்கள் வராமல் இப்பகுதியில் வியாபாரம் முற்றிலும் சரிந்து உள்ளது. ஒவ்வொரு கடைக்கும் மாதம் 80 ஆயிரம் ரூபாய் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை வாடகை செலுத்தப்படுகிறது. பணியாளர்களுக்கு சம்பளம், கடை வாடகை, கொடுக்க முடியாமல் திணறும் நிலை ஏற்பட்டுள்ளது.
பல்வேறு காரணங்களால் பணிகள் தாமதமாகின்றன. கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்கள் உள்ளிட்ட வார இறுதி நாட்களில் ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் வருவது வாடிக்கை. சாலையின் மோசமான நிலையால், வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது.
இவ்வாறு அவர்கள்கூறினர்.
ஒயிட் டாப்பிங் பணிகள் நடந்து வருகின்றன. குடிநீர், வடிகால் அமைப்பில் குழாய் இணைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இன்னும் இரண்டு நாட்களில் குழாய் பதிக்கும் பணிகள் முழுமை பெறும் என உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.