ADDED : டிச 21, 2024 10:45 PM
புதுடில்லி:டில்லி சட்டசபை வளாகத்தில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது, முதல்வர் ஆதிஷி சிங் பங்கேற்று கேக் வெட்டினார்.
சட்டசபை வளாகத்தில் ஆண்டுதோறும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விழா கொண்டாடப்படுகிறது.
இந்த ஆண்டுக்கான விழா நேற்று முன் தினம் நடந்தது. முதல்வர் ஆதிஷி சிங் கேக் வெட்டி அனைவருக்கும் வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:
கடைக்கோடி மக்களுக்காக உழைக்க வேண்டும் என்றுதான் எல்லா மதமும் போதிக்கின்றன. வேற்றுமையில் ஒற்றுமை என்பது நம் நாட்டு கலாசாரம். மொழி, மதம் மற்றும் உடையில் வேறுபடலாம். ஆனால், அனைவரும் இந்தியர். ஆம் ஆத்மி கட்சி அனைத்து மதங்களையும் அரவணைக்கிறது.
அரசியலமைப்புச் சட்டப்படி, வேற்றுமையில் ஒற்றுமை என்ற கனவை செயல்படுத்தியதற்காகவும், சட்டசபை வளாகத்தில் ஒவ்வொரு பண்டிகையையும் கோலாகலமாகக் கொண்டாட அனுமதி அளித்த சபாநாயகர் ராம் நிவாஸ் கோயலுக்கு இந்த நேரத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.