கான்ட்ராக்டர் சச்சின் தற்கொலை வழக்கில் சி.ஐ.டி., விசாரணை?: சி.பி.ஐ., தான் வேண்டும் என்கிறது பா.ஜ.,
கான்ட்ராக்டர் சச்சின் தற்கொலை வழக்கில் சி.ஐ.டி., விசாரணை?: சி.பி.ஐ., தான் வேண்டும் என்கிறது பா.ஜ.,
ADDED : டிச 31, 2024 05:38 AM

பெங்களூரு: 'கான்ட்ராக்டர் சச்சின் தற்கொலை வழக்கை, சி.ஐ.டி., விசாரணைக்கு ஒப்படைப்பது தொடர்பாக, முதல்வரிடம் ஆலோசித்து முடிவெடுக்கப்படும்' என உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் கூறியுள்ள நிலையில், 'சி.பி.ஐ., விசாரணைக்கு ஒப்படைக்க வேண்டும்' என மாநில பா.ஜ., தலைவர் விஜயேந்திரா வலியுறுத்தி உள்ளார்.
பீதர் மாவட்டம், பால்கி கட்டிடுங்காவ் கிராமத்தை சேர்ந்தவர் சச்சின் மோனப்பா பஞ்சால், 26; கான்ட்ராக்டர். இம்மாதம் 26ல் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தில், 'கலபுரகி மாநகராட்சி முன்னாள் கவுன்சிலர் ராஜு கப்பனுார், அரசு துறையில் ஒப்பந்த பணிகள் வாங்கி தருவதாக கூறி, என்னிடம் 15 லட்சம் ரூபாய் வாங்கி ஏமாற்றி விட்டார். மேலும், ஒரு கோடி ரூபாய் கேட்டு, கொலை மிரட்டல் விடுக்கிறார்' என்று குறிப்பிட்டிருந்தார்.
இது தொடர்பாக, பீதர் ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்தனர். ராஜு கப்பனுார் உட்பட ஏழு பேர் மீது, பால்கி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
ராஜு கப்பனுார், பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சர் பிரியங்க் கார்கேவின் தீவிர ஆதரவாளராக இருப்பதால், 'சச்சின் தற்கொலைக்கு பொறுப்பேற்று, அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும்' என்று எதிர்க்கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர்.
ஆலோசித்து முடிவு
இந்நிலையில், கான்டராக்டர் வீட்டுக்கு சென்ற வனத்துறை அமைச்சர் ஈஸ்வர் கன்ட்ரே, '10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும்.
'அலட்சியமாக செயல்பட்ட இரு போலீசார், சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்' என்றார்.
இந்நிலையில், பெங்களூரில் நேற்று உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் அளித்த பேட்டி:
சச்சினின் தற்கொலை கடிதத்தில், அமைச்சர் பிரியங்க் கார்கேயின் பெயர் இல்லை என்று போலீசார் எனக்கு தகவல் அளித்துள்ளனர். அப்படி இருந்தும், தேவையின்றி அமைச்சர் மீது குற்றம் சாட்டுகின்றனர். அவர், ராஜினாமா செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
இவ்வழக்கை, சி.ஐ.டி.,யிடம் ஒப்படைப்பது குறித்து முதல்வர் சித்தராமையாவிடம் ஆலோசித்த பின் முடிவெடுக்கப்படும். விசாரணை முடிந்த பின், உண்மை வெளிவரும்.
அனைத்து வழக்கையும் சி.பி.ஐ., விசாரணைக்கு ஒப்படைக்க வேண்டிய அவசியம் இல்லை. இதுபோன்ற வழக்குகளை, சி.ஐ.டி.,யினர் சிறப்பாக செயல்பட்டு, உண்மையை கண்டறிந்துள்ளனர். பல வழக்குகளை சி.ஐ.டி.,யினர் விசாரித்துள்ளனர்.
பா.ஜ.,வினர் கூறுவதையெல்லாம் கேட்க வேண்டிய அவசியம் இல்லை. சரியான ஆலோசனை, வழிகாட்டுதல் அளித்தால் கேட்போம். இதை தேவையின்றி அரசியல் ஆக்குகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
சி.பி.ஐ., விசாரணை
இதற்கிடையில், மல்லேஸ்வரம் பா.ஜ., அலுவலகத்தில் நேற்று விஜயேந்திரா அளித்த பேட்டி:
கான்ட்ராக்டர் சச்சின் வழக்கு விசாரணையை, சி.பி.ஐ.,க்கு ஒப்படைக்க வேண்டும். இதை நாங்கள் மட்டுமல்ல, சச்சின் குடும்பத்தினரும் வலியுறுத்தி உள்ளனர். முன்னதாக, வால்மீகி ஆணைய முறைகேட்டில், அமைச்சர் நாகேந்திரா ராஜினாமா செய்தார்.
பாதுகாப்பு
இதற்கு முன் சித்தராமையா ஆட்சி காலத்தில், மடிகேரியில் போலீஸ் அதிகாரி கணபதி தற்கொலை வழக்கு தொடர்பாக, அப்போது அமைச்சராக இருந்த ஜார்ஜ் ராஜினாமா செய்தார். சி.பி.ஐ., விசாரணையில் அவர் மீது எந்த தவறும் இல்லை என்று அறிக்கை வந்தது.
எனவே, சச்சின் வழக்கை சி.பி.ஐ., விசாரணைக்கு விட வேண்டும். அமைச்சர் பிரியங்க் கார்கேவிடம், முதல்வர் சித்தராமையா உடனடியாக ராஜினாமா பெற வேண்டும்.
சச்சின் குடும்பத்தினருக்கு உடனடியாக பாதுகாப்பு அளிக்க வேண்டும். அவர்களுக்கு நிவாரணமாக, 1 கோடி ரூபாய் வழங்க வேண்டும்.
அவரின் குடும்பத்தில் பலரும் படித்தவர்கள்; அவர்களில் ஒருவருக்கு அரசு வேலை தர வேண்டும். கலபுரகியை தங்கள் கைக்குள் வைத்திருக்கும் கார்கே குடும்பத்தினரை விசாரிக்க, மாநில போலீசாரால் முடியாது. எனவே, சி.பி.ஐ., விசாரணைக்கு ஒப்படைக்க வேண்டும்.
பிரியங்க் கார்கே, கிராம பஞ்சாயத்து ராஜ் மற்றும் ஐ.டி., - பி.டி., துறை அமைச்சர் மட்டுமல்ல; எந்த துறை குறித்து கேள்வி எழுப்பினாலும், உடனே எழுந்து, இவர் தான் பதிலளிக்கிறார். இவர் அனைத்துக்கும் அமைச்சராக உள்ளார்.
கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த நாள் முதல், தற்கொலை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
இதற்கு முன் ஆளும் அரசு, அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் மீது இதுபோன்ற குற்றச்சாட்டுகள் எழுந்ததில்லை.
சச்சின் வழக்கை சி.பி.ஐ., விசாரணைக்கு ஒப்படைக்கவில்லை என்றால், ஜன., 4ம் தேதி கலபுரகியில் அமைச்சர் பிரியங்க் கார்கே வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும். அதற்கு முன்னதாக, சி.பி.ஐ., விசாரணைக்கு முதல்வர் உத்தரவிட்டால் நல்லது.
இவ்வாறு அவர் கூறினார்.