ADDED : மே 01, 2025 12:57 AM

புதுடில்லி : இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வு கவுன்சில் நடத்திய 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பு தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின.
சி.ஐ.எஸ்.சி.இ., எனப்படும் இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுகளுக்கான கவுன்சில் நடத்திய 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்பு பொதுத்தேர்வுகள் பிப்ரவரி மற்றும் மார்ச்சில் நடந்தன. 20 இந்திய மொழிகள், 14 அன்னிய மொழிகள் உட்பட மொத்தம், 67 பாடங்களில் 10ம் வகுப்பு தேர்வுகள் நடத்தப்பட்டன.
இதேபோல் பிளஸ் 2 வகுப்புக்கு, 12 இந்திய மொழிகள் உட்பட 47 பாடங்களில் தேர்வுகள் நடத்தப்பட்டன. இந்த இரு வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின. இதில், 10ம் வகுப்பில் 99.37 சதவீத மாணவியர் வெற்றி பெற்றதாகவும், மாணவர்கள் சற்று குறைந்து 98.84 சதவீதம் தேர்ச்சி பெற்றதாகவும் அறிவிக்கப்பட்டது.
இதேபோல், பிளஸ் 2 தேர்விலும் மாணவியரே சிறப்பிடம் பெற்றுள்ளனர். அவர்கள் 99.45 சதவீதம் தேர்ச்சி பெற்றனர். மாணவர்கள் சற்று குறைந்து 98.64 சதவீதம் தேர்ச்சி பெற்றிருந்தனர்.
இந்த தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெறுவதற்கான 'இம்ப்ரூவ்மென்ட்' தேர்வு ஜூலையில் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

