கோல்கட்டா மருத்துவமனையில் மத்திய படையினர் குவிப்பு
கோல்கட்டா மருத்துவமனையில் மத்திய படையினர் குவிப்பு
ADDED : ஆக 21, 2024 02:00 PM

கோல்கட்டா: கோல்கட்டாவில் இளம் பயிற்சி பெண் டாக்டர் பலாத்காரம் செய்யப்பட்ட மருத்துவமனைக்கு மத்திய துணை ராணுவப்படையான சிஐஎஸ்எப் பாதுகாப்பு வழங்கப்பட்டு உள்ளது. வழக்கமாக இந்த படையினர் பார்லிமென்ட் மற்றும் விமான நிலையங்களில் தான் பாதுகாப்பு படையினர் இருப்பார்கள்.
மேற்கு வங்க மாநிலம் கோல்கட்டாவில் உள்ள ஆர்ஜி கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் இளம் பயிற்சி டாக்டர் ஒருவர் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டார். இச்சம்பவத்தில் ஈடுபட்ட ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். வழக்கு சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்றப்பட்டு உள்ளது.
நாடு முழுவதும் இச்சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சம்பவத்தை கண்டிப்பதாக கூறி கோல்கட்டாவில் போராட்டத்தில் ஈடுபட்ட வன்முறையாளர்கள், இந்த மருத்துவமனையை சூறையாடினர். அப்போது தடயங்கள் அழிக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்திய உச்சநீதிமன்றம், இந்த வன்முறை குறித்து மாநில அரசுக்கும், போலீசாருக்கும் அடுக்கடுக்கான கேள்விக்கணைகளை தொடுத்தது.
விசாரணையின் போது நீதிபதிகள், ஆயிரக்கணக்கானோர் கல்லுாரிக்குள் நுழைந்து சூறையாடியுள்ளனர். ஆனால், அங்கு பாதுகாப்புக்கு அதிகளவில் போலீசார் இல்லை. இருந்தவர்களும் தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது. டாக்டர் கொலை சம்பவம் நடந்தவுடன், அந்தக் கல்லுாரி வளாகத்தில் போலீஸ் பாதுகாப்பை மாநில அரசு பலப்படுத்தியிருக்க வேண்டும். இதில் அரசு தவறிவிட்டது என கேள்வி எழுப்பியிருந்தனர்.
இந்நிலையில் இந்த மருத்துவமனைக்கு மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள துணை ராணுவப்படையான சிஐஎஸ்எப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
இது குறித்து சிஐஎஸ்எப் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், ‛‛ எங்கள் பணியை செய்கிறோம். சில பணிகளுக்காக இங்கு வந்துள்ளோம். எங்களது பணி முடிந்த பிறகு மூத்த அதிகாரிகள் விளக்கம் அளிப்பார்கள். உயர் அதிகாரிகள் உத்தரவுப்படி இங்கு வந்துள்ளோம்'' என்றார்.

