விமான நிலையங்களின் பாதுகாப்புக்கு புதிய பிரிவை அமைத்தது சி.ஐ.எஸ்.எப்.,
விமான நிலையங்களின் பாதுகாப்புக்கு புதிய பிரிவை அமைத்தது சி.ஐ.எஸ்.எப்.,
UPDATED : டிச 08, 2024 04:10 AM
ADDED : டிச 08, 2024 01:30 AM

புதுடில்லி: நாட்டின் 68 விமான நிலையங்களில் பாதுகாப்பை வழங்கும், சி.ஐ.எஸ்.எப்., எனப்படும் மத்திய தொழில் பாதுகாப்பு படை, அதன் விமானப் பாதுகாப்பு பிரிவின் செயல்பாட்டுத் திறனை மேம்படுத்த, தரக் கட்டுப்பாட்டுப் பிரிவை அமைத்துள்ளது.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் மத்திய தொழில் பாதுகாப்பு படை, நம் நாட்டில் உள்ள விமான நிலையங்களில் பாதுகாப்பு வழங்குகிறது. இந்த படையில், 1.80 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர்.
இந்நிலையில், மத்திய தொழில் பாதுகாப்பு படையின் விமான பாதுகாப்பு பிரிவின் செயல்பாட்டு திறனை மேம்படுத்த, உள் தரக்கட்டுப்பாட்டுப் பிரிவு அமைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, மத்திய தொழில் பாதுகாப்பு படையின் மூத்த அதிகாரி நேற்று கூறியதாவது:
நம் நாட்டின் விமான நிலையங்களுக்கு உலகத்தரம் வாய்ந்த பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் தொழில்நுட்பத்தை நிறுவுவதில், உள் தரக்கட்டுப்பாட்டு பிரிவு முக்கியமான பங்கு வகிக்கும்.
இந்த புதிய பிரிவு, விமான பாதுகாப்பு நடைமுறைகளில் சீரான தன்மையை கொண்டு வருவதோடு, உலகம் முழுதும் கிடைக்கும் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்த பரிந்துரை செய்யும்.
மத்திய தொழில் பாதுகாப்பு படையின் விமான பாதுகாப்பு கட்டுப்பாட்டு மையத்தின் ஒரு பகுதியாக இருக்கும் இந்த பிரிவு, டில்லியை மையமாக வைத்து செயல்படும்.
அனைத்து விமான நிலையங்களிலும் பாதுகாப்பை ஒருங்கிணைப்பதற்கான மையப்படுத்தப்பட்ட தளமாக இந்தப் பிரிவு செயல்படும்.
மத்திய தொழில் பாதுகாப்பு படையின் மூத்த அதிகாரி, இந்த புதிய பிரிவை வழிநடத்துவார். சான்றளிக்கப்பட்ட விமான பாதுகாப்பு பயிற்றுநர்கள், இந்தப் பிரிவில் பணியாற்றுவர்.
இவ்வாறு அவர் கூறினார்.