பிஞ்சு மனதில் எப்படி வந்தது நஞ்சு; பெண் ஆசிரியரை பிளாக்மெயில் செய்த மாணவர்கள் கைது!
பிஞ்சு மனதில் எப்படி வந்தது நஞ்சு; பெண் ஆசிரியரை பிளாக்மெயில் செய்த மாணவர்கள் கைது!
ADDED : அக் 06, 2024 08:42 AM

லக்னோ: உத்தரபிதேசத்தில், ஆசிரியை குளிக்கும் வீடியோவை மறைமுகமாக எடுத்து மிரட்டிய, 4 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.
உத்தரபிரதேசம், ஆக்ராவில் வசிக்கும் ஆசிரியை மதுராவில் உள்ள ஒரு பள்ளியில் பாடம் நடத்தி வந்தார். படிப்பில் பலவீனமான 10ம் வகுப்பு மாணவர்களை தனது வீட்டிற்கு அழைத்து வந்து ஆசிரியர் பாடம் கற்பித்துள்ளார். அப்போது கொடூர மனது உடைய மாணவர் ஒருவர், ஆசிரியர் குளிக்கும் வீடியோவை மறைமுகமாக மொபைல் போனில் பதிவு செய்து கொண்டார். அந்த வீடியோவை சமூகவலைதளத்தில் வெளியிடுவேன் என ஆசிரியரை பிளாக்மெயில் செய்யத் துவங்கினார்.
அதுமட்டுமின்றி தனது நண்பர்களுடனும் அந்த வீடியோவை பகிர்ந்து கொண்டார். சமூக வலைதளத்திலும் அந்த வீடியோவை பகிர்ந்து விட்டனர். அவமானத்திற்கு பயந்த ஆசிரியை, தற்கொலை முயற்சி செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டார். இந்த தகவல் வெளியான நிலையில் மாணவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
ஆசிரியர்கள், சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: ஆசிரியர்களை அவமதிக்கும் மாணவர்கள் வாழ்க்கையில் முன்னேற முடியாது. இளைஞர்களிடையே அதிகரித்து வரும் போதைப்பொருள் துஷ்பிரயோகம் மற்றும் தகாத நடத்தை ஆகியவற்றை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆசிரியர்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும். இது மன்னிக்க முடியாத குற்றம், என்றனர்.