களி உருண்டை சாப்பிடும் போட்டி வெளுத்து கட்டிய ஆண், பெண்கள்
களி உருண்டை சாப்பிடும் போட்டி வெளுத்து கட்டிய ஆண், பெண்கள்
ADDED : நவ 11, 2024 05:33 AM

பொம்மனஹள்ளி: மாநில அளவிலான களி உருண்டை, கோழி குழம்பு சாப்பிடும் போட்டியில், ஆண்கள் பிரிவில் தாவணகெரே நபரும்; பெண்கள் பிரிவில் பெங்களூரு பெண்ணும் முதலிடம் பிடித்தனர்.
'கர்நாடகா' என பெயர் மாற்றப்பட்டு 50 ஆண்டுகள் ஆனதை ஒட்டி, பெங்களூரு பொம்மனஹள்ளியில் நேற்று மாநில அளவிலான களி மற்றும் கோழி குழம்பு சாப்பிடும் போட்டி நடத்தப்பட்டது.
இப்போட்டியில், பெங்களூரு, தாவணகெரே, ராம்நகர், துமகூரு, கோலார் உட்பட மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்தும் மக்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
ஆண்கள், பெண்களுக்கு அரை மணி நேரத்தில் எத்தனை களி உருண்டை சாப்பிடுகின்றனர் என்பது தான் போட்டி. அதன்படி, 13 களி உருண்டை சாப்பிட்டு முதலிடம் பிடித்த தாவணகெரேயை சேர்ந்த யோகேசுக்கு, '32 அங்குல டிவி' வழங்கப்பட்டது. தலா 12 களி உருண்டை சாப்பிட்ட பெங்களூரை சேர்ந்த சீனிவாச ரெட்டி, துமகூரின் குனிகலை சேர்ந்த லோகேசுக்கு தலா இரண்டு கோழிகள் வழங்கப்பட்டன.
அதுபோன்று பெண்கள் பிரிவில் ஒன்பது களி உருண்டை சாப்பிட்ட ஒயிட்பீல்டை சேர்ந்த சவுமியாவுக்கு '32 அங்குல டிவி 'வழங்கப்பட்டது. எட்டு களி உருண்டை சாப்பிட்ட பெங்களூரை சேர்ந்த சந்திரகலாவுக்கு மிக்சி கிரைண்டரும்; 7 களி உருண்டை சாப்பிட்ட கவிதாவுக்கு கிச்சன் செட்டும் பரிசாக வழங்கப்பட்டன.
விழா குழுவினர் கூறுகையில், 'உடலுக்கு நல்லது பயக்கும் உணவை பிரபலப்படுத்தும் வகையில், இப்போட்டி நடத்தப்பட்டது. நொறுக்கு தீனிகளால் உடல் நல பிரச்னை அதிகரித்து, பொருளாதார இழப்பு ஏற்படுகிறது. நல்ல உணவு முறைகளை ஊக்குவிக்கும் வகையில், இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டது' என்றனர்.
11_DMR_0027, 11_DMR_0028
களி உருண்டை சாப்பிடும் போட்டியில் ஆண்கள் பிரிவில், முதலிடம் பிடித்த யோகேஷ், (அடுத்த படம்) பெண்கள் பிரிவில் முதலிடம் பிடித்த சவுமியா.