பிரான்ஸ் நாட்டை சுட்டிக்காட்டி கரப்பான் கட்சிக்கு உயர் நீதிமன்றம் தெளிவான அறிவுரை!
பிரான்ஸ் நாட்டை சுட்டிக்காட்டி கரப்பான் கட்சிக்கு உயர் நீதிமன்றம் தெளிவான அறிவுரை!
UPDATED : அக் 22, 2026 12:43 AM
ADDED : அக் 21, 2026 09:29 PM

-சிறப்பு நிருபர்-
பிரான்ஸ் நாட்டில் போராட்டம் என்ற பெயரில் நடந்து வரும் வன்முறையை சுட்டிக்காட்டி, கரப்பான் பூச்சி கட்சிக்கு உயர் நீதிமன்றம் இன்று தெளிவான அறிவுரை வழங்கியது. 'போராட்டம் செய்வதை தடுக்கும் நோக்கம் யாருக்கும் இல்லை; அதே சமயம் தாக்குதல், வன்முறையை தடுக்கவே போலீஸ் பாதுகாப்பு' எனவும் விளக்கம் அளித்தது.
தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி கரப்பான் பூச்சி கட்சி கடந்த 10ம் தேதி போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தது. டில்லி ஜந்தர் மந்தரில், அக்கட்சி தலைவர்கள் கூடுவதற்கு முன்பாகவே, விமானத்தில் வைத்து போலீசார் கைது செய்தனர்.
பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் அடுத்த ஓராண்டுக்கு எந்த போராட்டமும் நடத்தக் கூடாது என்ற உத்தரவாத பத்திரத்தை எழுதி வாங்கி, விசாரணை நீதிமன்றம் கரப்பான்பூச்சி கட்சித் தலைவர்கள் அபிஜீத் தீப்கே, அசுதோஷ் ரன்கா, சவுரவ் தாஸ் ஆகியோரை விடுவித்தது.
இதன் தொடர்ச்சியாக டில்லி ஜந்தர் மந்தர் பகுதியை போராட்ட கள பட்டியலில் இருந்து அரசு நீக்கியது. இதனால், ஆவேசமடைந்த கரப்பான்பூச்சி கட்சி தலைவர்கள் அசுதோஷ் ரன்கா, சவுரவ் தாஸ் இருவரும், தடையை மீறி, ஜந்தர் மந்தரில் அமைக்கப்பட்டிருந்த தடுப்புகளை கடந்து சென்று போராட முயன்றனர்.
தடையை மீறியதற்காக இருவரையும் கடந்த 13ம் தேதி டில்லி போலீசார் மீண்டும் கைது செய்தனர். கடந்த 14ல் இருவரையும் ஐந்து நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது. பின்னர் கடந்த 19ல் மேலும் இரு நாட்கள் அவர்களது நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டது. இதையடுத்து, இன்று அவர்கள் விசாரணை நீதிமன்றம் முன் ஆஜர்படுத்தப்பட்டனர். நீதிமன்ற காவல் முடிவடைந்ததை அடுத்து, இருவரையும் விடுதலை செய்ய விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டது.
முன்னதாக, நீதிமன்ற காவல் நீட்டிப்பை எதிர்த்து இருவரும் டில்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இம்மனு உயர் நீதிமன்ற நீதிபதி சுப்ரமணியம் அமர்வில் இன்று காலை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
பொதுஅமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில் போராட்டம் நடத்தக் கூடாது என உத்தரவாத பத்திரம் எழுதி வாங்கியும், மீண்டும் போராட்டம் நடத்த அத்துமீறியது சரியா? அது சட்டவிரோதமான செயல் அல்லவா?
போராட்டத்தை முன் நின்று நடத்துபவர்களே நீங்கள் தான். ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தக் கூடாது என்ற உத்தரவு இருந்தும், தடுப்புகளை தாண்டி உள்ளே அத்துமீறி சென்றிருக்கிறீர்கள்.
தடுப்புகள் ஒரு நோக்கத்துக்காக அமைக்கப்படுகின்றன. உங்களை பார்த்து மேலும் சிலர் தடுப்புகளை உடைத்து, சட்டத்தை மீற அதிக வாய்ப்பு இருக்கிறது. அவர்கள் உங்கள் கட்டுப்பாட்டில் இல்லாதவர்களாகவும் இருக்கலாம். பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் நடப்பதையும் நாம் பார்க்கிறோம். அமைதியான போராட்டமாக தொடங்கி, தீ வைப்பு, கொள்ளை என மாறிவிடுகிறது.
அமைதியாக போராட்டம் நடத்தவே போலீசாரிடம் அனுமதி பெறப்படுகிறது. அந்த போராட்டத்தை தடுக்கும் நோக்கம் போலீசாருக்கு இல்லை. அதே சமயம், அன்னிய நபர்கள் உள்ளே நுழைந்து போராட்டத்தின் நோக்கத்தை கெடுக்க முயன்றால் உங்கள் பெயருக்கு தான் அவப் பெயர் ஏற்படும். அப்படி ஒரு தாக்குதலோ, வன்முறை போன்ற அசம்பாவிதங்களோ நிகழக் கூடாது என்பதற்காகவே போலீசார் அத்துமீறும் போராட்டக்காரர்களை தடுக்கின்றனர்.
கேள்விகள் முக்கியமானவை
காவல் நீட்டிப்பு உத்தரவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தை அணுகியதற்கு பதிலாக, முதலில் சம்பந்தப்பட்ட விசாரணை நீதிமன்றத்தில் தான் நிவாரணம் கோரியிருக்க வேண்டும். இந்த விவகாரத்தில் மறுஆய்வு மனு தாக்கல் செய்வதற்கான வழி இருக்கும்போது, அரசியல் சாசன சட்டத்தின் 226வது பிரிவின் கீழ் உயர் நீதிமன்றத்தை அணுகியது ஏன்?
பிற்பகல் 2:00 மணிக்கு விசாரணை நீதிமன்றம் என்ன சொல்கிறது என்று பார்ப்போம். அதன்பின் சட்டப்படி அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொள்ளலாம். இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.
இதையடுத்து, மனுவை திரும்ப பெற்றுக் கொள்வதாக அசுதோஷ் ரன்கா, சவுரவ் தாஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அபிக் சிம்னி கூறினார்.
இந்த வழக்கு விசாரணையின்போது அசுதோஷ் ரன்கா, சவுரவ் தாஸின் வயது குறித்தும் நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு அசுதோஷ் ரன்காவுக்கு, 31 வயது என்றும், சவுரவ் தாஸுக்கு, 26 வயது என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதற்கு நீதிபதி, 'அப்படியெனில் அவர்கள், 'ஜென் ஸீ' எனப்படும், இளம் தலைமுறையினர் அல்ல. ஜூலையில் மாணவர்களுக்காக போராட்டம் நடந்தது. ஆனால், தற்போது வேறு காரணத்திற்காக போராட்டம் நடத்தப்படுகிறது. அதே ஆட்கள் தான், ஆனால், போராட்டத்திற்கான காரணம் வேறு. நாட்டின் அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்கு பங்கம் விளைவிக்கும் சூழல் ஏற்படும் போது, போராட்டம் நடத்துபவர்கள் யார்? அவர்களின் நோக்கம் என்ன? போன்ற கேள்விகள் மிக முக்கியமானவை' என்றார்.
