510 அடி உயர கோபுரத்தில் ஏறி தொழிலாளி தற்கொலை மிரட்டல்
510 அடி உயர கோபுரத்தில் ஏறி தொழிலாளி தற்கொலை மிரட்டல்
ADDED : பிப் 18, 2025 06:09 AM

மாண்டியா: வேலையில் இருந்து நிறுத்தியதால் 510 அடி உயர கோபுரத்தில் ஏறி, தொழிலாளி தற்கொலை மிரட்டல் விடுத்தார்.
மாண்டியா பாண்டவபுராவில் அரசுக்கு சொந்தமான சர்க்கரை ஆலை உள்ளது. இந்த ஆலையில் மாண்டியா, மைசூரு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஏராளமானோர் பணியாற்றி வருகின்றனர்.
இந்த சர்க்கரை ஆலையை இரண்டு மாதங்களுக்கு முன்பு, முன்னாள் அமைச்சர் முருகேஷ் நிரானிக்கு சொந்தமான நிறுவனம் குத்தகைக்கு எடுத்தது.
பின், தொழிற்சாலையில் பல ஆண்டுகளாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் ஊழியர்கள் வேலையில் இருந்து நீக்கப்பட்டனர். ஒரு மாதத்திற்கு முன்பு 19 ஊழியர்கள் திடீரென நீக்கப்பட்டனர்.
தங்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என்று ஊழியர்கள் இரவு, பகலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று அதிகாலை 4:00 மணிக்கு போராட்டத்தில் ஈடுபட்ட ராமகிருஷ்ணா என்ற ஊழியர், தொழிற்சாலையில் உள்ள 510 அடி உயர கோபுரத்தில் ஏறினார். கோபுரத்தின் உச்சிக்குச் சென்ற அமர்ந்து கொண்டார்.
இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த சக ஊழியர்கள், ராமகிருஷ்ணாவை கீழே இறங்கி வரும்படி கூறினார். அவர் மறுத்துவிட்டார். 'மீண்டும் நாம் அனைவரையும் நிறுவனம் பணியில் சேர்த்தால் தான், கோபுரத்திலிருந்து இறங்குவேன் இல்லாவிட்டால், கீழே குதித்து தற்கொலை செய்து கொள்வேன்' என மிரட்டல் விடுத்தார்.
அவரிடம் சர்க்கரை ஆலை நிறுவனம், போலீசார் தொடர்ந்து பேச்சு நடத்தின. ஏழு மணி நேர பேச்சுக்கு பின் கோபுரத்திலிருந்து ராமகிருஷ்ணா கீழே இறங்கி வந்தார்.