கை விட்டு போனது ‛கடிகாரம்' சின்னம் : ஏமாற்றத்தில் சரத்பவார்
கை விட்டு போனது ‛கடிகாரம்' சின்னம் : ஏமாற்றத்தில் சரத்பவார்
ADDED : அக் 24, 2024 07:12 PM

புதுடில்லி : ‛‛கடிகாரம்'' சின்னத்தை தன் கட்சிக்கு ஒதுக்கிட கோரி உச்சநீதிமன்றத்தில் சரத்பவார் தொடர்ந்த வழக்கில் ‛கடிகாரம்' சின்னம் அஜித்பவாரிடமே இருக்க வேண்டும் என உத்தரவிட்டதால் சரத்பவாருக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
கடந்த 2023ம் ஆண்டு ஜூலையில் மஹாராஷ்டிராவில் பிரதான எதிர்கட்சியான சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்., கட்சி இரண்டாக உடைந்தது. அஜித்பவார் தன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் சிலருடன் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில், சிவசேனா - பா.ஜ., கூட்டணி ஆட்சிக்கு ஆதரவு அளித்து துணை முதல்வரானார்.
இரு தரப்பினரும் கட்சியின் பெயர், சின்னத்துக்கு உரிமை கோரி தேர்தல் கமிஷனில் முறையிட்டனர். இதில் கட்சி சின்னமான ‛‛கடிகாரம்'' அஜித்பவாருக்கும், சரத்பவாரின் சரத்சந்திரபவார் தேசியவாத காங். என்ற கட்சிக்கு ‛ டிரம்பெட் ஊதும் மனிதன்' சின்னம் ஒதுக்கியது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் சின்னம் தற்காலிகமானது தான் என தீர்ப்பளித்தது.
இந்நிலையில் ‛‛கடிகாரம்'' சின்னத்தை தன் கட்சிக்கு ஒதுக்கிட கோரியும், வேறு சின்னத்தை அஜித்பவாருக்கு ஒதுக்கிட கோரியும் சரத்சந்திரபவார் தேசிய வாத காங்., கட்சியின் சரத்பவார் உச்சநீதிமன்றத்தில் கடந்த 04-ம் தேதி மனு தாக்கல் செய்தார்.
மனுவை நீதிபதிகள் சூர்ய காந்த், திபங்கர் தத்தா மற்றும் உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணை நடத்தி கூறியது. சரத் பவாரால் நிறுவப்பட்ட தேசியவாத காங்., பிளவுபடுவதற்கு முன், 'கடிகாரம் சின்னம் தேர்தல் சின்னமாக வைத்திருந்தது, தற்போது அஜித்பவாரிடம் சின்னம் இருக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவு தற்காலிகமானது.
இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தின் முடிவு நீடிக்கும் என நீதிபதிகள் அறிவித்து, ‛கடிகாரம் சின்னம் அஜித்பவார் தரப்பிடமே இருக்கும் என உத்தரவிட்டனர். உச்சநீதிமன்ற உத்தரவால் சரத்பவார் தரப்புக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.