மாசு கட்டுப்பாட்டுக்காக மேகத்தில் விதை துாவல் செப்., முதல் அல்லது 2ம் வாரத்தில்
மாசு கட்டுப்பாட்டுக்காக மேகத்தில் விதை துாவல் செப்., முதல் அல்லது 2ம் வாரத்தில்
ADDED : ஜூலை 18, 2025 08:24 PM
புதுடில்லி:''செப்டம்பர் முதல் மற்றும் இரண்டாம் வாரத்தில், டில்லி மாநகரின் வானில், மேகத்தில் மழைக்கு விதை சோதனை முயற்சியில் துாவப்படும். அதன் பலன்களை பார்த்த பின், சுற்றுச்சூழல் மாசுவை கட்டுப்படுத்த அடிக்கடி மேகத்தில் மழைக்கு விதை துாவப்படும்,'' என, மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மன்ஜிந்தர் சிங் சிர்சா கூறினார்.
டில்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிர்சா கூறியதாவது:
டில்லி மாநகரின் காற்றில் நிலவும் மாசுவை கட்டுப்படுத்த, மேகத்தில் மழைக்கு விதை துாவப்படுகிறது.
செப்டம்பர் முதல் அல்லது இரண்டாம் வாரத்தில் இதற்கான சோதனை முயற்சி மேற்கொள்ளப்படும். இந்த பணியை, ஐ.ஐ.டி., கான்பூர் செய்ய உள்ளது.
இதற்காக, 3.21 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. டி.ஜி.சி.ஏ., எனப்படும் விமான போக்குவரத்து துறை தலைமை இயக்குனரகம் இந்த சோதனை திட்டத்தை செயல்படுத்த தேவையான அனுமதியை வழங்கியுள்ளது.
சர்ச்சைக்குரிய, தடை செய்யப்பட்ட இடங்களில் எவ்வித விதை துாவல் முயற்சியும் மேற்கொள்ளப்படாது. அதுபோல, போட்டோ எடுக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. விமான போக்குவரத்து துறை வழங்கியுள்ள அனுமதி, கண்டிப்புடன் பின்பற்றப்படும்.
இதற்காக, செஸ்னா 206 எச் விமானம் தயாராக உள்ளது. சுற்றுச்சூழலுக்கு அதிக மாசு ஏற்படுத்தும் ஐந்து இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. குறிப்பாக, வடக்கு டில்லியின் ரோஹினி, பவானா, அலிப்பூர், புராரி, உத்தர பிரதேசத்தின் சில பகுதிகளான லோனி மற்றும் பாக்பாத் பகுதிகளில் மேகத்தில் மழைக்கு விதை துாவப்படும்.
இந்த பகுதிகளில் மேகத்தின் கீழ் பகுதியில் விமானம் பறந்து, சோடியம் குளோரைடு மற்றும் பிற ரசாயனங்களை, மழைக்காக துாவப்படும். இதன் பலன்களை பார்த்த பின், மாசுவை கட்டுப்படுத்த மேகத்தில் அடிக்கடி மழைக்கான விதை துாவப்படும்.
இவ்வாறு கூறினார்.