உத்தராகண்டில் மேக வெடிப்பால் பெரு வெள்ளம் 50 பேர் மாயம்! ஹோட்டல்கள், வீடுகள் தரைமட்டமாகின
உத்தராகண்டில் மேக வெடிப்பால் பெரு வெள்ளம் 50 பேர் மாயம்! ஹோட்டல்கள், வீடுகள் தரைமட்டமாகின
ADDED : ஆக 06, 2025 07:59 AM
உத்தரகாசி : உத்தராகண்டின் உத்தரகாசியில் மேக வெடிப்பால் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்கி, இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர். 50க்கும் மேற்பட்டோர் மாயமாகி இருப்பதால், பலி எண்ணிக்கை உயரக்கூடும். மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் அங்கு விரைந்துள்ளனர். பெருவெள்ளத்துடன் மண்சரிவு ஏற்பட்டதில் தாராலி கிராமத்தின் ஒரு பகுதி மண்ணோடு மண்ணாக புதைந்தது. ஹர்சில் பகுதியில் இருந்த ராணுவ முகாம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதில் 9 வீரர்கள் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இமயமலை தொடரில் அமைந்துள்ள உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ளது உத்தரகாசி. இம்மாவட்டத்தின் தாராலி கிராமம், சார்தாம் யாத்திரையின் ஒரு அங்கமாக இருக்கும் கங்கோத்ரி கோவில் அருகே அமைந்திருக்கிறது.
மலைப் பாங்கான இந்த கிராமத்தில் சுற்றுலா பயணியர் வசதிக்காக ஏராளமான மரங்கள் வெட்டப்பட்டு கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன.
தற்போது சார்தாம் யாத்திரையும் நடந்து வருவதால், அங்கு பக்தர்களும், சுற்றுலா பயணியரும் குவிந்துள்ளனர்.
கோரதாண்டவம் இந்நிலையில், தாராலி கிராமத்தில் நேற்று பகல் 1:45 மணிக்கு திடீரென மேகவெடிப்பு ஏற் பட்டது.
இதனால் மலை உச்சியில் இருந்து சேறு, சகதியுடன் கரை புரண்டு வந்த வெள்ளம் குறுக்கே இருந்த வீடுகள், ஹோட்டல்கள், விடுதிகள், கட்டடங்கள் என அனைத்தையும் வாரி சுருட்டி சென்றது.
இதில் ஏராளமான கட்டடங்கள் மண்ணோடு மண்ணாக புதைந்தன. 50க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர். இதனால், அவர்கள் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
தா ராலி கிராமத்தில் இருந்த ஹோட்டல்கள், மார்க்கெட்கள் என அனைத்தும் கண் இமைக்கும் நேரத்திற்குள் அழிந்து விட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் மிரட்சியுடன் தெ ரிவிக்கின்றனர்.
கீர் கங்கா நதியின் நீர்ப்பிடிப்பு பகுதியில் மேகவெடிப்பு ஏற்பட்டு, கனமழை பொழிந்ததே பெருவெள்ளம் ஏற்பட முக்கிய காரணமாக கூறப்படுகிறது. தாராலி கிராமத்தில் இருந்து 4 கி.மீ., தொலைவில் உள்ள ஹர்சில் பகுதியில் இருந்த ராணுவ முகாமும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.
இதில் 9 வீரர்கள் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இயற்கை பேரிடர் பற்றி தகவல் அறிந்த மாநில, தேசிய பேரிடர் மீட்புப் படையினரும், பிற குழுவினரும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை போர்க்கால அடிப் படையில் செய்து வருகின்றனர். மண்ணில் புதைந்த 15 பேர் முதற்கட்டமாக மீட்கப்பட்டுள்ளனர்.
பிரதமர் உறுதி சம்பவம் தொடர்பாக கேள்விப்பட்டதும் உடனடியாக உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய பிரதமர் மோடி, 'மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும்' என, உறுதியளித்தார்.
அத்துடன் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இரங்கலையும் தெரிவித்துக் கொண்டார்.
மீட்புப் பணிக்காக இந்தோ - திபெத் எல்லை பாதுகாப்புப் படையினரும் தாராலி கிராமத்திற்கு சென்ற டைந்தனர். முக்கிய சாலைகள் மண்சரிவால் மூடப்பட்டதால் கங்கோத்ரி பிற பகுதிகளில் இருந்து துண்டிக்கப் பட்டுள்ளது.
சுற்றுலா பயணியர் வசதிக்காக காடுகளை அழித்து ஹோட்டல்கள், விடுதிகள் உள்ளிட்ட கான்கிரீட் கட்டுமானங்களை கட்டியதே இத்தகைய இயற்கை பேரிடருக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
மீண்டும் மேகவெடிப்பு இதற்கிடையே தாராலியை தொடர்ந்து, அங்கிருந்து 16 கி.மீ., தொலைவில் உள்ள சுக்கி என்ற கிராமத்திலும் மேகவெடிப்பு ஏற்பட்டது.
மலைப் பகுதியில் சேறு, சகதியுடன் பெருவெள்ளம் பாய்ந்து வந்ததில், பசுமையான மரங்களும் அழிந்தன. இந்த சம்பவத்தில் உயிரிழப்பு ஏற்பட்டதாக தகவல் வெளியாகவில்லை.