உத்தராகண்டில் கொட்டித் தீர்க்கும் பருவமழை; மேக வெடிப்பால் மண் சரிவு: ஒருவர் உயிரிழப்பு
உத்தராகண்டில் கொட்டித் தீர்க்கும் பருவமழை; மேக வெடிப்பால் மண் சரிவு: ஒருவர் உயிரிழப்பு
ADDED : ஆக 23, 2025 08:56 AM

சாமோலி: உத்தராகண்டில் மேக வெடிப்பால் ஏற்பட்ட மண் சரிவு பெரும் சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. இதில் மண் சரிந்ததில் பெண் ஒருவர் பலியானார். ஏராளமான கட்டடங்கள் சேதம் அடைந்துள்ளன.
உத்தராகண்ட் மாநிலம் சாமோலி மாவட்டம் தாராலி என்ற பகுதியில் இன்று (ஆக.23) அதிகாலை திடீரென மேக வெடிப்பு ஏற்பட்டது. இதனால் தாராலி நகரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள ஏராளமான பகுதிகள் கடும் சேதத்தை சந்தித்தன.
ஏராளமான குடியிருப்புகள், கட்டடங்கள் மண்ணில் புதைந்தன. மண் சரிவில் சிக்கிய வாகனங்கள் கடும் சேதம் அடைந்தன. பலத்த மழை மற்றும் மண் சரிவால சாலைகளும் பாதிப்பு, எங்கு பார்த்தாலும் குப்பைகள் நிரம்பி காட்சி அளித்தன.
மிங்கதேரா அருகே தாராளி-குவால்டம் சாலை மூடப்பட்டுள்ளது. தாராலி-சக்வாரா சாலையில் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.
செப்டன் சந்தை பெரும் சேதத்தை சந்தித்துள்ளது. மேக வெடிப்பு, மழை மற்றும் மண் சரிவை அறிந்த பேரிடர் மீட்புக் குழுவினர் நிவாரணப் பணிகளில் இறங்கி உள்ளனர்.
சாக்வாரா என்ற கிராமத்தில் மண் சரிவால் ஏற்பட்ட இடிபாடுகளில் பெண் ஒருவர் சிக்கி பலியானார். மேக வெடிப்பை அறிந்த ஏராளமான மக்கள் குடியிருப்புகளை விட்டுவிட்டு பாதுகாப்பான இடங்களை நோக்கி ஓடி தஞ்சம் அடைந்தனர்.
சேதம் அதிகம் இருக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுவதால் தாராலி தாலுகாவில் உள்ள கல்வி நிலையங்களுக்கு இன்று (ஆக.23) ஒருநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதனிடையே உத்தராகண்ட் மாநிலத்திற்கு இன்று ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. இடியுடன் கூடிய கன மழையானது தெஹரி, டேராடூன், சாமோலி, ருத்ரபிரயாக், நைனிடால், அல்மோரா ஆகிய பகுதிகளில் பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.