புராரி பஸ் பணிமனையில் கிளஸ்டர் எலக்ட்ரிக் பஸ்சில் தீ
புராரி பஸ் பணிமனையில் கிளஸ்டர் எலக்ட்ரிக் பஸ்சில் தீ
ADDED : அக் 16, 2024 08:51 PM
புராரி:பணிமனையில் சார்ஜ் செய்தபோது, கிளஸ்டர் எலக்ட்ரிக் பேருந்து தீப்பிடித்தது.
வடக்கு டில்லியின் புராரி பேருந்து பணிமனையில் நேற்று முன்தினம் தாழ்தள கிளஸ்டர் எலக்ட்ரிக் பேருந்து சார்ஜ் செய்தபோது திடீரென தீப்பிடித்தது.
தகவல் அறிந்து இரண்டு தீயணைப்பு வாகனங்கள் அங்கு விரைந்து சென்றன. அவை இரண்டு மணி நேரம் போராடி தீயை கட்டுப்படுத்தின.
இந்த சம்பவத்தில் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை. பேருந்து தீப்பிடித்து எரிந்ததும் சார்ஜ் ஏற்றுவது நிறுத்தப்பட்டது. தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. இருப்பினும், பேட்டரிகளின் வெப்பநிலை அதிகரிப்பு காரணமாக இதுபோன்ற சம்பவம் நிகழ்கிறது. தீ விபத்து நேர்ந்த இடத்தை, ஐ.ஐ.டி., நிபுணர்கள் குழு, ஆய்வு செய்யும் என, போக்குவரத்துத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
டில்லியில் கடந்த எட்டு ஆண்டுகளில் 30க்கும் மேற்பட்ட பேருந்துகள் தீப்பிடித்து எரிந்தன. கடந்த ஆண்டில் மட்டும் 12 பேருந்துகள் தீ விபத்தில் நாசமடைந்தன.
டி.டி.சி., மற்றும் கிளஸ்டர் பேருந்துகள் தீபிடித்து நாசமடைவது குறித்து ஆய்வு செய்ய ஐ.ஐ.டி., நிபுணர்கள் தலைமையில் பல் துறை குழுவை அரசு கடந்த மாதம் 13ம் தேதி போக்குவரத்துத்துறை அமைத்தது.
மூன்று வாரங்களுக்குள் இடைக்கால அறிக்கை சமர்ப்பிக்கவும் எட்டு வாரங்களுக்குள் இறுதி அறிக்கையும் சமர்ப்பிக்க குழு கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது.
அதன்படி, தன் இடைக்கால அறிக்கையை பல் துறை குழு கடந்த வாரம் சமர்ப்பித்தது.
'பேருந்துகளில் ஏற்பட்ட தீ விபத்துகளுக்கு ஷார்ட் சர்க்யூட் தான் பொதுவான காரணம்' என, டில்லி சட்டசபையில் அரசு தெரிவித்தது.
ஷார்ட் சர்க்யூட் மற்றும் இன்ஜின் அதிக வெப்பமடைவது ஆகியவை பொதுவான காரணங்கள் என, கிளஸ்டர் பேருந்து டிரைவர்கள் கூறினர்.

