ஓட்டுனர் இல்லா மெட்ரோ ரயில் வருகை முகுந்த்பூரில் முதல்வர் ஆதிஷி ஆய்வு
ஓட்டுனர் இல்லா மெட்ரோ ரயில் வருகை முகுந்த்பூரில் முதல்வர் ஆதிஷி ஆய்வு
ADDED : நவ 19, 2024 08:10 PM

முகுந்த்பூர்:டில்லி மெட்ரோ மெஜந்தா வழித்தடத்தில் நான்காம் கட்டமாக சேர்க்கப்படும் ஓட்டுனர் இல்லாத ரயிலை முதல்வர் ஆதிஷி செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தார்.
கடந்த 2020 டிசம்பரில், ஜனக்புரி மேற்கு முதல் தாவரவியல் பூங்கா வரையிலான மெஜந்தா வழித்தடத்தில் ஓட்டுனர் இல்லாத ரயில் சேவை அறிமுகம் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து மஜ்லிஸ் பார்க் முதல் ஷிவ் விஹார் வரையிலான பிங்க் வழித்தடத்தில் 2021 நவம்பரில் இந்த சேவை விரிவுபடுத்தப்பட்டது.
தற்போது 29 ஓட்டுனர் இல்லா ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தன் அனைத்து வழித்தடங்களிலும் ஓட்டுனர் இல்லா ரயில் சேவை வழங்க டில்லி மெட்ரோ தயாராகி வருகிறது.
கடந்த 2022 நவம்பரில் பிரான்ஸ் நாட்டின் ஆல்ஸ்டாம் என்ற நிறுவனத்திற்கு ஓட்டுனர் இல்லா மெட்ரோ ரயில்கள் தயாரிக்கும் ஒப்பந்தம் வழங்கப்பட்டது. இதன்படி, தலா ஆறு பெட்டிகளை கொண்ட 52 மெட்ரோ ரயில்களை இந்த நிறுவனம் தயாரிக்கிறது.
நான்காம் கட்ட திட்டத்துக்கான ஓட்டுனர் இல்லாத ரயில்கள், ஆந்திரா மாநிலம், ஸ்ரீசிட்டியில் தயாரிக்கப்பட்டு வருகின்றன. மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் அனைத்து பாதுகாப்பு அம்சங்களுடனும் முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டு வருகிறது.
முதற்கட்ட ரயில்கள் கடந்த செப்டம்பரில் மாதம் டில்லி மெட்ரோவிடம் ஸ்ரீசிட்டியில் ஒப்படைக்கப்பட்டன. இந்த ரயில்கள் அதிகபட்சமாக, மணிக்கு 95 கி.மீ., வேகத்தில் இயக்கலாம். தற்போது 85 கி.மீ., வேகத்தில் இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த ரயில்கள் கடந்த வெள்ளிக்கிழமை டில்லியின் முகுந்த்பூர் பணிமனைக்கு கொண்டு வரப்பட்டன. இந்த ரயில்கள் மெஜந்தா வழித்தடத்தில் இயக்கப்பட உள்ளன. இந்த ரயில்களை முதல்வர் ஆதிஷி நேற்று ஆய்வு செய்தார்.