200 புதிய எலக்ட்ரிக் பஸ்களை துவக்கி வைத்தார் முதல்வர்
200 புதிய எலக்ட்ரிக் பஸ்களை துவக்கி வைத்தார் முதல்வர்
ADDED : ஏப் 18, 2026 01:15 AM

புதுடில்லி : சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத வகையில், டில்லியில் புதிதாக, 200 எலக்ட்ரிக் பஸ்களை, முதல்வர் ரேகா குப்தா நேற்று துவக்கி வைத்தார். இதன் மூலம், 4,550 பஸ்கள் எலக்ட்ரிக் பஸ்கள் டில்லியில் ஓடுகின்றன.
டில்லி கிழக்கு வினோத்பூர் பஸ் டிப்போவில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், 200 புதிய எலக்ட்ரிக் பஸ்களை, முதல்வர் ரேகா குப்தா துவக்கி வைத்தார்.
அப்போது அவர் பேசியதாவது:
டில்லியில் எனது தலைமையிலான, பாஜ., அரசு பொறுப்பேற்றது முதல், புதிய பஸ்கள் அல்லது புதிய கட்டடம் துவக்கப்படும் போது, டில்லியில் சிறப்பான நிர்வாகம் அமைய வேண்டும் என்ற எங்களின் எண்ணம் வெளிப்படுகிறது.
'மிஷன் மோடு' என்ற ரீதியில் எங்கள் செயல்பாடு உள்ளது. டில்லி மாநில அரசின் எலக்ட்ரிக் வாகனங்கள் கொள்கை நாட்டிலேயே மிகச் சிறந்ததாக உள்ளது. பல ஆண்டுகளாக தலைநகரில் நிலவும் மாசுவை கட்டுப் படுத்த, எங்களின் அரசு பல்வேறு நட வடிக்கைகளை எடுத்து வருகிறது.
அதன் ஒரு கட்டமாக, இந்த எலக்ட்ரிக் பஸ்கள் துவக்கப்படுகின்றன. இப்போது, மொத்தமுள்ள, 6,300 பஸ்களில், 4,550 பஸ்கள் எலக்ட்ரிக் பஸ்களாக உள்ளன. அவற்றின் எண்ணிக்கையை விரைவில், 7,000 ஆக உயர்த்த உள்ளோம்.
இவ்வாறு முதல்வர் ரேகா குப்தா பேசினார்.
பின் அவர், டில்லி - ரோடக் இன்டர்சிட்டி பஸ் சேவையை துவக்கி வைத்தார். மேலும், மதன்பூர் காதர் பஸ் டிப்போவுக்கு புதிய அலுவலகத்தையும் அவர் திறந்து வைத்தார்.
