கெஜ்ரிவால் தனி செயலருக்கு ஜாமின்: முதல்வர் வீட்டிற்குள் நுழையக்கூடாது என நிபந்தனை
கெஜ்ரிவால் தனி செயலருக்கு ஜாமின்: முதல்வர் வீட்டிற்குள் நுழையக்கூடாது என நிபந்தனை
ADDED : செப் 02, 2024 07:01 PM

புதுடில்லி: ஆம்ஆத்மி பெண் எம்.பி., ஸ்வாதி மாலிவால் தாக்கிய வழக்கில் கெஜ்ரிவால் தனிச்செயலர் பிபவ் குமாருக்கு நிபந்தனையுடன் சுப்ரீம் கோர்ட் இன்று ஜாமின் வழங்கியது.
மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கைதாகி ஜாமினில் வெளியே வந்த டில்லி ஆம்ஆத்மி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை அவரது இல்லத்திற்கு கடந்த மே 13-ம் தேதி நேரில் சந்திக்க ராஜ்யசபா பெண் எம்.பி. ஸ்வாதி மாலிவால் சென்றார். அப்போது கெஜ்ரிவாலை சந்திக்கவிடாமல் தனிச்செயலர் பிபவ் குமார் அடித்து உதைத்து தாக்கியதாக ஸ்வாதி மாலிவால் பரபரப்பு கூறினார்.
இதனை ஆம் ஆத்மி அமைச்சர் அதிஷி மறுத்தார். எனினும் இந்த விவகாரம் தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியதையடுத்து டில்லி போலீசார் பிபவ் குமார் மீது வழக்குப்பதிந்து கடந்த மே 18-ம் தேதி கைது செய்தனர்.
வழக்கு டில்லி ஹசாரி கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. விசாரணைக்கு ஒத்துழைக்க மறுக்கிறார் என டில்லி போலீசார் தொடர்ந்து குற்றம்சாட்டியதால், பல முறை கோர்ட் காவல் நீடிக்கப்பட்டது.
கடந்த ஜூலை மாதம் ஜாமின் கோரிய மனுவை விசாரித்த டில்லி ஐகோர்ட், ஜாமின் மறுத்தது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த அப்பீல் மனுவை இன்று விசாரித்த நீதிபதிகள் சூரியகாந்த், உஜால் பூயான், பிபவ் குமார், முதல்வரின் இல்லத்திற்குள் நுழையக்கூடாது, சாட்சிகளிடம் தொடர்பு வைத்துக்கொள்ளக்கூடாது உள்ளிட்ட நிபந்தனைகளுடன் ஜாமின் வழங்கி உத்தரவிட்டனர். இதைடுத்து 100 நாள் சிறைவாசத்திற்கு பின் ஜாமினில் வெளியே வர உள்ளார்.