பா.ஜ., 'மாஜி' அமைச்சர் சுதாகரை காங்.,கில் சேர்க்க முதல்வர் எதிர்ப்பு
பா.ஜ., 'மாஜி' அமைச்சர் சுதாகரை காங்.,கில் சேர்க்க முதல்வர் எதிர்ப்பு
ADDED : பிப் 22, 2024 11:10 PM

சிக்கபல்லாபூர்: பா.ஜ., முன்னாள் அமைச்சர் சுதாகரை மீண்டும் காங்கிரசில் சேர்க்க, முதல்வர் சித்தராமையா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
சிக்கபல்லாப்பூர் தொகுதி பா.ஜ., முன்னாள் எம்.எல்.ஏ., சுதாகர். பா.ஜ., ஆட்சியில் சுகாதாரத் துறை அமைச்சராகவும் பணியாற்றினார். கடந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் தோல்வி அடைந்தார்.
வரும் லோக்சபா தேர்தலில், சிக்கபல்லாபூர் தொகுதி பா.ஜ., சீட் எதிர்பார்க்கிறார். ஆனால் எலஹங்கா தொகுதி பா.ஜ., - எம்.எல்.ஏ., விஸ்வநாத் தனது மகனுக்கு சீட் வாங்கி கொடுக்க நினைக்கிறார்.
முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் தீவிர ஆதரவாளர் என்பதால், விஸ்வநாத்தின் மகனுக்கு, சீட் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.
இதனால் அதிருப்தியில் இருக்கும் சுதாகரை, காங்கிரசுக்கு இழுக்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன. சுதாகருடன், சிக்கபல்லாபூர் மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் சிலர் தொடர்பில் உள்ளனர்.
துணை முதல்வர் சிவகுமாரும், சுதாகருடன் பேசி இருப்பதாக சொல்லப்படுகிறது.
சுதாகர் முன்பு காங்கிரஸில் இருந்தவர். எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்து விட்டு, பா.ஜ.,வுக்கு சென்றதால் அவர் மீது முதல்வர் சித்தராமையா, இன்னும் கோபத்தில் உள்ளார்.
இதனால் சுதாகரை மீண்டும் கட்சியில் சேர்க்க, அவர் எதிர்ப்பு தெரிவிப்பதாக சொல்லப்படுகிறது.
சுதாகர் ஒக்கலிகர் என்பதால், அந்த சமூக ஓட்டுகளை கவரும் நோக்கில், சுதாகரை காங்கிரசுக்கு கொண்டு வர துணை முதல்வர் சிவகுமார் முயற்சி செய்கிறார்.