டில்லியை சர்வதேச மருத்துவ மையம் ஆக்குவதே நோக்கம் முதல்வர் ரேகா குப்தா பேச்சு
டில்லியை சர்வதேச மருத்துவ மையம் ஆக்குவதே நோக்கம் முதல்வர் ரேகா குப்தா பேச்சு
ADDED : ஆக 03, 2025 08:21 PM

புதுடில்லி:“தலைநகர் டில்லியை சர்வதேச மருத்துவ மையமாக மாற்றுவதே டில்லி பா.ஜ., அரசின் நோக்கம்,” என, முதல்வர் ரேகா குப்தா பேசினார்.
புதுடில்லி கைலாஷ் காலனியில், தனியார் பல்நோக்கு மருத்துவமனையை, முதல்வர் ரேகா குப்தா நேற்று திறந்து வைத்து பேசியதாவது:
நம் நாட்டில், 1,000 பேருக்கு ஒரு படுக்கையே மருத்துவமனையில் உள்ளது.
எனவே, மத்திய மற்றும் மாநில அரசுகளுடன் தனியாரும் இணைந்து கவனம் செலுத்தினால் மருத்துவத் துறையில் இதுபோன்ற சவால்களை எதிர்கொள்ள முடியும்.
நாட்டின் தலைநகரான டில்லியை, சர்வதேச மருத்துவ மையமாக மாற்றுவதும், உள்நாடு மட்டுமின்றி, வெளிநாடுகளில் இருந்தும் நோயாளிகளை ஈர்ப்பதும் டில்லி பா.ஜ., அரசின் நோக்கம்.
ஒரு சொட்டு ரத்தத்திலிருந்து முழுமையான டி.என்.ஏ., விபரத்தை தரக்கூடிய மேம்பட்ட இயந்திரம் ஜி.பி.பந்த் அரசு மருத்துவமனையில் சமீபத்தில் நிறுவப்பட்டுள்ளது.
முந்தைய ஆம் ஆத்மி ஆட்சிக் காலத்தில் துவக்கப்பட்ட பல மருத்துவமனைகள் கட்டி முடிக்கப்படாமல் பாதியிலேயே இருக்கின்றன.
அனைத்து மருத்துவமனைகளிலும் கட்டுமானப் பணியை விரைவுபடுத்தி, அதன் முழு செயல்பாட்டை உறுதி செய்ய, தனியாருடன் இணைந்து செயல்பட அரசு முடிவு எடுத்துள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
புதுடில்லி பா.ஜ., - எம்.பி., பான்சுரி ஸ்வராஜ், கைலாஷ் காலனி எம்.எல்.ஏ., ஷிக்கா ராய் மற்றும் மருத்துவமனை நிர்வாகிகள் பங்கேற்றனர்.
முன்னதாக, கைலாஷ் காலனியில், 'ஜன்சேவா கேந்திரா'வை முதல்வர் ரேகா குப்தா திறந்து வைத்து, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.