'முடா' குறித்த முதல்வர் வழக்கு: ஜன., 25ல் இறுதி விசாரணை
'முடா' குறித்த முதல்வர் வழக்கு: ஜன., 25ல் இறுதி விசாரணை
ADDED : டிச 06, 2024 06:46 AM
பெங்களூரு: 'முடா' முறைகேட்டில் தன் மீது விசாரணை நடத்த கவர்னர் அளித்த அனுமதியை எதிர்த்து, முதல்வர் சித்தராமையா தாக்கல் செய்த மனு மீதான இறுதி விசாரணை ஜனவரி 25ல் உயர் நீதிமன்றத்தில் நடக்கிறது.
'முடா' எனும் மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்தில், தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி மனைவி பார்வதிக்கு 14 வீட்டுமனைகள் வாங்கி கொடுத்ததாக, முதல்வர் சித்தராமையா மீது குற்றச்சாட்டு எழுந்தது.
அவர் மீது விசாரணைக்கு உத்தரவிட கோரி கவர்னர் தாவர்சந்த் கெலாட்டிடம், மைசூரு சமூக ஆர்வலர் சிநேகமயி கிருஷ்ணா புகார் செய்தார். அதன் அடிப்படையில் முதல்வரிடம் விசாரிக்க கவர்னர் அனுமதி அளித்தார்.
மனு தாக்கல்
இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில், முதல்வர் மனு செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதி நாகபிரசன்னா, 'கவர்னரின் அனுமதி செல்லும்' என்று கூறினார். இதையடுத்து, உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி அன்சாரியா, நீதிபதி அரவிந்த் அமர்வில், முதல்வர் தரப்பில் மேல்முறையிட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதற்கிடையில், 'முடா முறைகேட்டை சி.பி.ஐ., விசாரணைக்கு ஒப்படைக்க வேண்டும்' என்று, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதை எதிர்த்து நிலத்தின் உரிமையாளர் தேவராஜ், உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த இரண்டு மனுக்கள் மீதான விசாரணையும் ஒரே அமர்வில் நடந்தது. நேற்று மனுக்கள் விசாரணைக்கு வந்தன.
அனுமதி இல்லை
மாநில அரசு சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் கபில் சிபல் வாதாடுகையில், ''இது முக்கிய அரசியல் சாசன பிரச்னை. முதல்வர், அமைச்சர்கள் மீது விசாரணை நடத்த அனுமதிக்க கவர்னருக்கு அனுமதி இல்லை,'' என்றார்.
முதல்வர் சார்பில் ஆஜரான வக்கீல் அபிஷேக் மனு சிங்வி வாதாடுகையில், ''முதல்வருக்கு எதிராக விசாரணை நடத்த கவர்னர் அளித்த அனுமதியை உறுதி செய்ததன் மூலம், தனி நீதிபதி தவறு செய்துள்ளார்,'' என்றார்.
புகார்தாரர் சிநேகமயி கிருஷ்ணா சார்பில் ஆஜரான வக்கீல்கள் ராகவன், மணிந்தர் சிங் வாதாடுகையில், முதல்வர் தரப்பில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவிற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேல்முறையீட்டு மனுவை ஏற்கக் கூடாது' என்றும் கேட்டுக்கொண்டனர்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், 'மனு மீதான இறுதி விசாரணை, ஜனவரி 25ல் நடைபெறும்,'' என்றார்.
மேலும் மேல்முறையீட்டு மனு தொடர்பாக கவர்னரின் சிறப்பு செயலர், புகார்தாரர்கள் ஆபிரகாம், சிநேகமயி கிருஷ்ணா, பிரதீப் குமார் ஆகியோர் பதில் அளிக்க, நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டனர்.