ADDED : மே 17, 2025 04:53 AM

ஆமதாபாத்: குஜராத்தில் வெளியாகும் பிரபல, 'குஜராத் சமாச்சார்' நாளிதழின் இணை உரிமையாளர் பாகுபலி ஷா, 73, சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத் துறையினரால் நேற்று கைது செய்யப்பட்டார்.
குஜராத்தில், முதல்வர் பூபேந்திர படேல் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, குஜராத்தி மொழியில் அதிகம் விற்பனையாகும் நாளிதழாக 'குஜராத் சமாச்சார்' உள்ளது. மேலும், இந்த நாளிதழுக்கு, 'ஜி.எஸ்., டிவி' என்ற பெயரில் செய்தி சேனலும் உள்ளது.
இந்த இரண்டும், 'லோக் பிரகாஷன் லிமிடெட்' என்ற நிறுவனத்தின் கீழ் இயங்குகின்றன. கடந்த 1932ல் துவங்கப்பட்டு, 92 ஆண்டுகளாக இந்த நாளிதழ் இயங்கி வருகிறது.
இந்நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவரான பாகுபலி ஷா, 'குஜராத் சமாச்சார்' நாளிதழின் இணை உரிமையாளராக உள்ளார்.
ஆமதாபாதில் உள்ள ஜி.எஸ்., டிவி அலுவலகத்தில், சமீபத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதைத் தொடர்ந்து, அமலாக்கத் துறையினர் நேற்று முன்தினம் சோதனை நடத்தினர்.
இதில், சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று பாகுபலி ஷாவை, அமலாக்கத் துறையினர் கைது செய்தனர். ஆனால், எதற்காக அவர் கைது செய்யப்பட்டார் என்பது குறித்த விபரங்கள் வெளியிடப்படவில்லை.
நிதி முறைகேடு தொடர்பாக, பாகுபலி ஷா கைது செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
பாகுபலி ஷா கைது செய்யப்பட்டதற்கு, காங்., - ஆம் ஆத்மி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் வெளியிட்ட பதிவில், 'குஜராத் சமாச்சார் நாளிதழை அடக்கும் முயற்சி, ஒரு நாளிதழை மட்டுமல்ல; முழு ஜனநாயகத்தின் குரலையும் நசுக்குவதற்கான சதி' என, குறிப்பிட்டுள்ளார்.