டில்லி ஷாக் ரூ.2,000 கோடி மதிப்பு 'கோகைன்' சிக்கியது
டில்லி ஷாக் ரூ.2,000 கோடி மதிப்பு 'கோகைன்' சிக்கியது
ADDED : அக் 03, 2024 02:33 AM
புதுடில்லி, டில்லியில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில், 2,000 கோடி ரூபாய் மதிப்புள்ள 'கோகைன்' போதைப்பொருள் சிக்கியது. இது தொடர்பாக, நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.
டில்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் போதைப்பொருள் விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதன்படி, டில்லியின் மெஹரவுலியில் இயங்கிய போதைப்பொருள் கும்பலை, கடந்த இரண்டு மாதங்களாக போலீசார் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.
இந்நிலையில், டில்லி போலீசார் அப்பகுதியில் அதிரடியாக ரெய்டு நடத்தி, 565 கிலோ எடையிலான கோகைன் போதைப்பொருளை பறிமுதல் செய்தனர்.
இதன் சர்வதேச மதிப்பு 2,000 கோடி ரூபாய் என தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக நான்கு பேரை கைது செய்தனர்.
முன்னதாக டில்லி சர்வதேச விமான நிலையத்தில் கடந்த மாதம் 29ம் தேதி, விமானத்தில் கோகைன் போதைப்பொருள் கடத்தி வந்த லைபீரியா நாட்டைச் சேர்ந்த நபரை போலீசார் கைது செய்தனர்.
அந்நபரிடம் பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் சர்வதேச மதிப்பு 24 கோடி ரூபாய்.