கத்தாரில் இருந்து கடத்தி வந்த கோகைன் மதிப்பு ரூ.38 கோடி! பெங்களூரு ஏர்போர்ட்டில் கானா நாட்டு பெண் கைது
கத்தாரில் இருந்து கடத்தி வந்த கோகைன் மதிப்பு ரூ.38 கோடி! பெங்களூரு ஏர்போர்ட்டில் கானா நாட்டு பெண் கைது
ADDED : மார் 19, 2025 09:20 PM
தேவனஹள்ளி ; கத்தாரில் இருந்து பெங்களூருக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட 38 கோடி ரூபாய் மதிப்பிலான, கோகைன் போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இதை கடத்தி வந்த கானா நாட்டை சேர்ந்த பெண்ணை, வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கைது செய்து, விசாரிக்கின்றனர்.
பெங்களூரு, தேவனஹள்ளியில் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் உள்ளது. வெளிநாடுகளில் இருந்து விமானங்களில் தங்கம், வெளிநாட்டு பணம், சிகரெட்டுகள், விலங்கு குட்டிகள் கடத்தப்பட்டு வருவதும், சுங்க துறை அதிகாரிகளிடம் சிக்குவதும், தொடர் கதையாக நடந்து வருகிறது.
கண்காணிப்பு
கடந்த 3ம் தேதி இரவு, துபாயில் இருந்து பெங்களூருக்கு 12 கோடி ரூபாய் மதிப்பிலான, தங்க கட்டிகளை கடத்தி வந்த நடிகை ரன்யா ராவை, டி.ஆர்.ஐ., எனும் வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்.
கர்நாடகா மட்டுமின்றி தேசிய அளவில் இந்த கடத்தல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையடுத்து, பெங்களூரு விமான நிலையத்தின் மீது, வருவாய் புலனாய்வு அதிகாரிகள் கண் வைக்க ஆரம்பித்து உள்ளனர். விமான நிலையத்திற்கு வரும் பயணியர் பற்றிய விபரங்களையும் சேகரித்து வருகின்றனர்.
இந்நிலையில், மேற்கு ஆசிய நாடான கத்தாரின் தலைநகர் தோஹாவில் இருந்து பெங்களூரு வந்த விமானம், நேற்று முன்தினம் நள்ளிரவில் தரையிறங்கியது. அந்த விமானத்தில் பயணி ஒருவர் போதை பொருள் கடத்துவதாக, வருவாய் புலனாய்வு அதிகாரிகளுக்கு ஏற்கனவே தகவல் கிடைத்து இருந்தது.
விமானம் வருவதற்கு சில மணி நேரத்திற்கு முன்பே, விமான நிலையத்திற்கு சென்று, அதிகாரிகள் காத்து இருந்தனர். விமானத்தில் இருந்து இறங்கி வெளியே வந்த பயணியரை தீவிரமாக கண்காணித்தனர்.
அப்போது ஒரு பெண் பயணி மீது, அதிகாரிகளுக்கு சந்தேகம் வலுத்தது. அந்த பயணியை தனியாக அழைத்து சென்று சோதனைக்கு உட்படுத்தினர். அவர் கொண்டு வந்த லக்கேஜ்களில் சோதனை நடத்திய போது 3.20 கிலோ எடை கொண்ட கோகைன் சிக்கியது. வெளிநாட்டு சந்தையில் அதன் மதிப்பு 38.40 கோடி ரூபாய்.
நைஜீரியர்கள்
கத்தாரில் இருந்து கடத்தி வந்து, பெங்களூரில் விற்பனை செய்யவும் அந்த பெண் பயணி திட்டமிட்டது தெரியவந்தது. அவர் கைது செய்யப்பட்டார். விசாரணையில் அவர், மேற்கு ஆப்பிரிக்காவின் கானா நாட்டின் ஜெனிபர் அபே, 44; என்பது தெரிந்தது. அவரை நேராக விமான நிலையத்தில் இருந்து ஹெச்.எஸ்.ஆர்., லே - அவுட்டில் உள்ள, தங்கள் அலுவலகத்திற்கு வருவாய் புலனாய்வு அதிகாரிகள் அழைத்து சென்றனர்.
கோகைன் கடத்தி வந்ததன் பின்னணியில், வேறு சிலருக்கும் தொடர்பு இருக்கலாம், பெரிய வலை அமைப்பு கொண்டதாக இருக்கலாம் என்றும், அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டு உள்ளது. ஜெனிபர் அபேயிடம் தீவிர விசாரணை நடத்துகின்றனர். அவர் மீது போதை பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ், வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
மேற்கு ஆப்பிரிக்காவின் நைஜீரியாவை சேர்ந்தவர்கள், பெங்களூரில் சட்டவிரோதமாக வசித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் போதை பொருள் விற்பனையில் ஈடுபட்டு உள்ளனர். அவர்களில் யாருடனாவது ஜெனிபருக்கு தொடர்பு இருக்கலாம் என்றும் சந்தேகம் எழுந்து உள்ளது.
இதனால் பெங்களூரு போலீசாரிடம் இருந்து, போதை பொருள் விற்பனை செய்யும் நைஜீரியா நபர்களின் தகவல்களை பெறவும், வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் தயாராகி வருகின்றனர்.