முதல்வர் அறிவித்த ரூ.5 லட்சம் நிராகரித்த 'கோகோ' வீரர்கள்
முதல்வர் அறிவித்த ரூ.5 லட்சம் நிராகரித்த 'கோகோ' வீரர்கள்
ADDED : ஜன 26, 2025 10:58 PM

பெங்களூரு: 'கோகோ' விளையாட்டில், இந்திய அணியில் விளையாடி உலக கோப்பை வென்ற கர்நாடகாவின் கவுதம் மற்றும் சைத்ரா, முதல்வர் சித்தராமையா அறிவித்த 5 லட்சம் ரூபாயை நிராகரித்துள்ளனர்.
சமீபத்தில் டில்லியின், இந்திரா காந்தி விளையாட்டு அரங்கில் நடந்த கோகோ விளையாட்டில், இந்திய அணி சார்பில் ஆண்கள் பிரிவில் பங்கேற்ற கவுதம், மகளிர் அணியில் பங்கேற்ற சைத்ரா உலக கோப்பையை வென்றனர். இருவரும் கர்நாடகாவை சேர்ந்தவர்கள்.
மாநிலத்துக்கு பெருமை சேர்த்த இவர்களை பாராட்டிய முதல்வர் சித்தராமையா, தலா 5 லட்சம் ரூபாய் வெகுமதி அறிவித்தார். இந்த தொகையை கவுதம், சைத்ரா நிராகரித்துள்ளனர்.
இது குறித்து, அவர்கள் பெங்களூரில் அளித்த பேட்டி:
கோகோ விளையாட்டுக்கு, மாநில அரசு ஊக்கமளிக்கவில்லை. அரசு சார்பில் எங்களுக்கு எந்த சலுகையும் கிடைக்கவில்லை. இது எங்களுக்கு வருத்தம் அளித்துள்ளது. நாங்கள் முதன் முறையாக, உலக கோப்பை வென்ற பின், முதல்வர் சித்தராமையா எங்களுக்கு வெறும் 5 லட்சம் ரூபாய் வெகுமதி அறிவித்துள்ளார். எங்களை போன்ற விளையாட்டு வீரர்களுக்கு, மஹாராஷ்டிரா, உத்தரபிரதேச மாநிலங்களில் பெரிய தொகையை வெகுமதி அறிவித்துள்ளனர். அது மட்டுமின்றி அரசு பணி அளிப்பதாக உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
ஆனால் கர்நாடக அரசு எங்களுக்கு எந்த சலுகையும் அளிக்கவில்லை. அரசு அறிவித்த 5 லட்சம் ரூபாய் வெகுமதியை, நாங்கள் நிராகரிக்கிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

