
ரூபேஷ் ஷெட்டி நாயகனாக நடிக்கும், 'அதிபத்ரா' திரைப்படம், 2025 பிப்ரவரி 7ம் தேதி, மாநிலம் முழுதும் திரைக்கு வரவுள்ளது. படத்தின் கதை குறித்து, படக்குழுவினர் கூறுகையில், 'கடலோர பகுதியில் பிரபலமான யக்ஷகானா, புலி ஆட்டம் போன்ற கலைகளை மையமாக கொண்டது. சஸ்பென்ஸ், திரில்லிங் கதை கொண்டது.
'கடலோர பகுதியிலேயே படப்பிடிப்பும் நடந்துள்ளது. இதில் ரூபேஷ் ஷெட்டிக்கு ஜோடியாக நிகழ்ச்சி தொகுப்பாளினி ஜான்ஹவி நடிக்கிறார். இம்மாதம் 27ம் தேதி, படத்தின் முதல் பாடல் வெளியிடப்படும். படத்தில் தீபக் ராய், ரகு பாண்டேஸ்வரா, கார்த்திக் பட் உட்பட, நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்' என்றனர்.
தீபக் மதுவனஹள்ளி இயக்கும், 'அன்லாக் ராகவா' திரைக்கு வர தயாராகிறது. இதில் ரேச்சல் டேவிட் நாயகியாக நடிக்கிறார். நடிகர் மிலிந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இது குறித்து, அவரிடம் கேட்ட போது, இந்த படத்தில் நான் மூத்த நடிகர் அனந்த் நாகுடன் இணைந்து நடிப்பது மகிழ்ச்சியான விஷயம். இது என் தொழில் வாழ்க்கையில், மிகவும் முக்கியமான படமாகும். நடனம், நடிப்பு, சண்டைக்காட்சிகள் பயிற்சி பெற, ஓராண்டு ஒதுக்கினேன்.
'என்னை தயார்படுத்தி கொண்டு படப்பிடிப்பில் பங்கேற்றேன். அனந்த் நாக் மட்டுமின்றி, ஷோபராஷ், சாது கோகிலா, ரமேஷ்பட் போன்ற மூத்த நடிகர்களும் படத்தில் உள்ளனர். படத்தை பற்றி பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளோம். இப்படம் எனக்கு திருப்புமுனையாக இருக்கும் என, நம்புகிறேன், என்றார்.
கன்னட திரையுலகின் அழகான ஜோடி யஷ் மற்றும் ராதிகா பண்டித். பல சூப்பர் ஹிட் படங்களில் ஜோடியாக நடித்த இவர்கள், காதலித்து திருமணம் செய்து கொண்டனர். திருமணத்துக்கு பின், இரண்டொரு படங்களில் நடித்த ராதிகா, குழந்தைகள் பிறந்த பின் நடிப்புக்கு குட்பை கூறி, குழந்தைகளை பராமரிக்கிறார். சமீபத்தில் இவர்கள் திருமண ஆண்டு விழா கொண்டாடினர்.
திருமணமாகி, இரண்டு குழந்தைகளுக்கு தாயான பின்னரும், இவருக்கு மவுசு குறையவில்லை. தற்போது யஷ், 'டாக்சிக்' படத்தில் பிசியாக இருக்கிறார். மும்பையில் படப்பிடிப்பில் இருக்கிறார். ராதிகாவும் சில நாட்கள் அங்கிருந்தார். ஊடகத்தினர் யஷ்ஷை, நவீன் கவுடா என அழைத்ததால் ராதிகா கோபமடைந்தார். 'நவீன் கவுடா என்ற பெயரை சட்டப்பூர்வமாக யஷ் என, மாற்றி பல ஆண்டுகளாகின்றன. அப்படியே அழையுங்கள்' என, சாடினார்.
மூத்த நடிகர் ராகவேந்திர ராஜ்குமார், அடுத்தடுத்த படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கிறார். தற்போது அந்த வரிசையில், 'கண்ணா மூத்து காடே கூடே' படமும் சேர்ந்துள்ளது. கதை குறித்து படக்குழுவினரிடம் கேட்ட போது, 'ஒரு கொலையை சுற்றி கதை நகரும். அதை கண்டுபிடிக்க முயற்சி நடக்கிறது. இதற்கிடையே இளம் பெண்ணொருவர் பிரச்னையில் சிக்குகிறார்.
'இதில் இருந்து அவர் விடுபடுகிறாரா, கொலையாளி கிடைக்கிறாரா என்பதை திரையில் பாருங்கள். விறுவிறுப்பான கதை கொண்டதாகும். படத்தில் ராகவேந்திர ராஜ்குமார், ஓய்வு பெற்ற டாக்டர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பெரும்பகுதி படப்பிடிப்பு, மங்களூரின் அழகான சூழலில் நடந்துள்ளது. புதுமுகம் பிரார்த்தனா, நாயகியாக அறிமுகமாகிறார். வில்லனாக வீரேஷ்குமார் நடித்துள்ளார்' என்றனர்.
கன்னட திரையுலக ரசிகர்களின் பேவரிட் ஜோடிகளில், உபேந்திரா, ரம்யாவும் ஒன்றாகும். 17 ஆண்டுகளுக்கு முன், இவர்கள் இணைந்து நடித்த 'பீமூஸ் பேங்க் பேங்க் கிட்ஸ்' படம் தயாரானது. படப்பிடிப்பு, புரொடக்ஷன் ஒர்க் என, அனைத்தும் முடிந்தது. ஆனால் என்ன காரணத்தாலோ, படம் திரைக்கு வரவே இல்லை.
தற்போது இந்த படம், 'ரக்த காஷ்மீரா' என, பெயர் மாற்றம் செய்து, திரைக்கு வரவுள்ளது. இது குறித்து படக்குழுவினர் கூறுகையில், 'இதனை ராஜேந்திர பாபு இயக்கியிருந்தார். பயங்கரவாத பின்னணி கொண்ட கதையாகும். 2025 துவக்கத்தில் படம் வெளியாகும். உபேந்திரா, ரம்யா நடித்த வெற்றி படங்களின் வரிசையில், 'ரக்த காஷ்மீரா'வும் சேரும் என்ற நம்பிக்கை உள்ளது' என்றனர்.
நடிகை ரீஷ்மா நாணய்யா, தன் 17 வயதில் திரையுலகில் நுழைந்தார். தற்போது ஜர்னலிசம் படித்து வருகிறார். இவரது நடிப்பில் 'யுஐ' 'கேடி' படங்கள் வெளியாவதற்கு காத்திருக்கிறார். இதற்கிடையே, 'அண்ணா பிரம் மெக்சிகோ' படத்தில் நடிக்கிறார்.
இது பற்றி ரீஷ்மா கூறுகையில், பிரேம் இயக்கிய 'ஏகலைவா' படத்தில் நடித்த போது, எனக்கு 17 வயது. இப்போது பத்திரிகை துறையில் உயர் கல்வி படிக்கிறேன். அதன்பின் தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்கின்றன. கன்னடம் மட்டுமின்றி, தமிழ், தெலுங்கில் இருந்தும் வாய்ப்பு வருகிறது. ஆனால் எதையும் நான் ஒப்புக்கொள்ளவில்லை. கன்னடத்துக்கே நான் முன்னுரிமை அளித்து கதை கேட்கிறேன், என்றார்.