
கடந்த 2011ல், நாகசேகர் இயக்கத்தில் திரைக்கு வந்த 'சஞ்சு வெட்ஸ் கீதா' திரைப்படம் சூப்பர் ஹிட்டானது. தற்போது அதன் அடுத்த பாகம் திரைக்கு வர தயாராகிறது. இதையும் நாகசேகர் இயக்குகிறார். ஸ்ரீநகர் கிட்டி நாயகனாகவும், அவருக்கு ஜோடியாக ரசிதா ராமும் நடிக்கின்றனர். இதில் ரங்காயணா ரகு உட்பட நட்சத்திர பட்டாளமே, இப்படத்தில் நடித்துள்ளனர். கிளாமர் குயின் ராகினி திரிவேதி, ஒரு சிறப்பு பாடலுக்கு கவர்ச்சி ஆட்டம் போட்டுள்ளார். ஜனவரி 10ம் தேதி இப்படம் திரைக்கு வருகிறது. இதே நாளில் வேறு மொழிகளில், ஸ்டார் நடிகர்களின் படங்களும் திரைக்கு வருகின்றன. படத்தின் முக்கியமான காட்சிகளை, சுவிட்சர்லாந்தின் அழகான பகுதிகளில் படமாக்கி உள்ளனர். இசை அமைப்பாளராக பணியாற்றுகிறார்.
திரையுலகுக்கு அறிமுகமில்லாத புதியவர்களே சேர்ந்து, 'ஜனரிந்தா நானு மேலே பந்தே' என்ற படத்தை தயாரிக்கின்றனர். சமீபத்தில் லீலாவதி கோவிலில் படத்துக்கு பூஜை நடந்தது. நடிகர் வினோத்ராஜ், கிளாப் அடித்து படப்பிடிப்பை துவக்கி வைத்து, படக்குழுவினரை வாழ்த்தினார். நான்கு ஆண்டுகளுக்கு முன், சென்னை மற்றும் மங்களூரில் நடந்த சம்பவங்களை மையமாக கொண்டு, திரைக்கதை பின்னப்பட்டுள்ளது. குடிசைப்பகுதியில் வசிக்கும் நாயகன், நடன கலைஞராக விரும்புகிறார். மற்றொரு நாயகன் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு, நடனமே உலகம் என, வாழ்கிறார். இவர்களின் கனவு நிறைவேறியதா, கனவை நனவாக்க அவர்கள் எப்படி கஷ்டப்படுகின்றனர் என்பதே, கதையின் சாராம்சம். கந்தர்வராஜ் சங்கர், நவீன் நாயகன்களாக, சவுந்தர்யா, கிருத்திகா திவாகர் நாயகியராக நடித்துள்ளனர்.
ஸ்டண்ட் மாஸ்டர் திரில்லர் மஞ்சு, சண்டை காட்சிகளை வடிவமைப்பதில் மட்டுமல்ல, நடிப்பிலும் கை தேர்ந்தவர். பல சூப்பர்ஹிட் படங்களில் நாயகனாக நடித்து, ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர். தற்போது 'முகில மல்லிகே' என்ற படத்தில் முத்தத்தி தேவராஜ் என்ற கதாபாத்திரத்தில், திரில்லர் மஞ்சு நடிக்கிறார். மிகவும் உணர்வுப்பூர்வமான கதாபாத்திரம். இவரது மனைவியாக பவ்யா நடிக்கிறார். ஹொஸ்கோட் சுற்றுப்பகுதிகளில் சண்டை காட்சிகள், உரையாடல் பகுதிகளை படமாக்கினர். பாடல்களை படமாக்க சக்லேஸ்புரா, மடிகேரிக்கு செல்ல படக்குழுவினர் தயாராகின்றனர். சனத் நாயகனாக, சஹனா சந்திரசேகர் நாயகியாக நடிக்கின்றனர்.
இளம் தலைமுறையினரை குறி வைத்து, இயக்குனர் பிரதீப் தொட்டய்யா, 'அவுட் ஆப் சிலபஸ்' என்ற படத்தை இயக்கி உள்ளார்.. படத்தில் முக்கியமான கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். இதில் ஹிருதிகா ஸ்ரீனிவாஸ் நாயகியாக நடித்துள்ளார். பிரதீப் தொட்டய்யா பல இயக்குனர்களுடன் பணியாற்றி, அனுபவம் பெற்றவர். இப்போது இயக்குனராக மாறியுள்ளார். இன்றைய தலைமுறையினருக்கு பிடித்தமான அனைத்தும், படத்தில் உள்ளது. அச்யுத்குமார், யோகராஜ்பட், ராமகிருஷ்ணா உட்பட, பலர் நடித்துள்ளனர். டிசம்பர் 27ம் தேதி, படம் திரைக்கு வரவுள்ளது. இந்த படத்தை விஜயகலா சுதாகர், தனஷ், தேசாய் கவுடா இணைந்து தயாரித்துள்ளனர்.
நடிகை ரஷ்மிகா மந்தண்ணா மீது, கன்னடர்கள் கடுங்கோபத்தில் உள்ளனர். இவருக்கு வாழ்வளித்த கன்னட திரையுலகத்தை அவர் மறந்துள்ளார். 'கிரிக் பார்ட்டி' திரைப்படத்தில் அறிமுகமான இவர், அதன்பின் திரும்பி பார்க்க நேரம் இல்லாமல் பிசியானார். தமிழ், தெலுங்கு திரையுலகுக்கு சென்ற அவர், கன்னடத்தில் நடிக்க ஆர்வம் காட்டவில்லை. சமீபத்தில் ஊடகத்தினர் சந்திப்பில், பிடித்த நடிகர் யார் என, கேட்ட போது ரஜினி, விஜய், ஷாருக்கான், சிரஞ்சீவி என, வேறு மொழிகளின் நடிகர்களின் பெயரை கூறினாரே தவிர, மறந்தும் கூட கன்னட நடிகர்களின் பெயரை கூறவில்லை. அதே போன்று பிடித்த இயக்குனர்களின் பெயரிலும் கன்னட இயக்குனர்களை குறிப்பிடவில்லை. தன்னை நாயகியாக அறிமுகம் செய்த ரிஷப் ஷெட்டியையும் நினைவு கூறாதது சரியல்ல என, கன்னடர்கள் கொதிப்படைந்துள்ளனர்.
சின்னத்திரை தொடரில் நடித்த நடிகை சம்பதா, 'ரைடர்' திரைப்படத்தில் நிகில் குமாரசாமிக்கு ஜோடியாக நடித்தார். அதன்பின் அடுத்தடுத்த படங்களில் நடித்தார். தெலுங்கிலும் இவருக்கு ஆபர் வந்துள்ளது. தற்போது 'எக்கா' படத்தில் யுவ ராஜ்குமாருக்கு ஜோடியாக சம்பதா நடிக்கிறார். இது ஆக்ஷன், திரில்லர் படமாகும். படத்தின் டீசர் ஏற்கனவே வெளியானது. இந்த படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 2025ம் ஆண்டு ஜூனில் திரைக்கு கொண்டு வர, படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். எனவே படப்பிடிப்பை நடத்துகின்றனர்.