UPDATED : ஆக 14, 2024 11:45 PM
ADDED : ஆக 14, 2024 11:39 PM

புதுடில்லி: சுரங்கங்கள், கனிம வளமுள்ள நிலங்கள் மற்றும் கனிமங்களுக்கான ராயல்டி மற்றும் வரியை, மத்திய அரசு மற்றும் சுரங்க ஒப்பந்தம் பெற்றுள்ள நிறுவனங்களிடம் இருந்து, 2005ம் ஆண்டு முதல் வசூலிக்க, மாநிலங்களுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன் வாயிலாக, மாநில அரசுகளுக்கு வசூல் மழை பொழிய உள்ளது.
சுரங்கங்கள் மற்றும் கனிமங்களுக்கான, 'ராயல்டி' எனப்படும் காப்புத் தொகை மற்றும் வரி விதிப்பது தொடர்பான அதிகாரம் மத்திய அரசுக்கு உள்ளதா, மாநில அரசுக்கு உள்ளதா என்பதில் பெரும் குழப்பம் இருந்து வந்தது.
'இண்டியா சிமென்ட்ஸ்' நிறுவனம் மற்றும் தமிழக அரசுக்கு இடையிலான வழக்கில், 1989ல் உச்ச நீதிமன்றத்தின் ஏழு நீதிபதிகள் அடங்கிய அரசியலமைப்பு சட்ட அமர்வு உத்தரவு பிறப்பித்தது.
அதில், 'வரி விதிக்கும் அதிகாரம், பார்லிமென்டுக்கும், மத்திய அரசுக்கும் மட்டுமே உள்ளது. மாநில அரசுக்கோ, சட்டசபைகளுக்கோ அந்த அதிகாரம் கிடையாது' என, அந்த உத்தரவில் கூறப்பட்டிருந்தது.
சட்டம் என்ன?
இதன்பின், மேற்கு வங்க அரசு மற்றும் 'கேசோராம் இண்டஸ்ட்ரீஸ்' நிறுவனம் இடையே, இது போன்ற பிரச்னை ஏற்பட்டது.
அந்த வழக்கில், உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியலமைப்பு சட்ட அமர்வு, 2004ல் உத்தரவு பிறப்பித்தது. முந்தைய 1989 உத்தரவில் அச்சுப் பிழை உள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.
அதாவது, 'ராயல்டி மீதான கூடுதல் வரி, ஒரு வரியே' என்பதற்கு பதிலாக, 'ராயல்டி என்பது ஒரு வரியே' என்று தவறாக அச்சிடப்பட்டுள்ளதாக கூறியது. அதனால், ராயல்டி ஒரு வரியல்ல என்பது உறுதியாகிறது என்றும் அமர்வு தன் உத்தரவில் கூறியது.
இதற்கிடையே, இதே போன்ற பிரச்னையில் 80க்கும் மேற்பட்ட வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் குவிந்தன. இந்த வழக்குகளை, தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான ஒன்பது நீதிபதிகள் அடங்கிய அரசியலமைப்பு சட்ட அமர்வு விசாரித்தது.
இந்த அமர்வு கடந்த ஜூலை 25ல், 8:1 என பெரும்பான்மை உத்தரவு அளித்தது. அதில், 'ராயல்டி என்பது வரி அல்ல. தனியாக வரி விதிக்க சட்டசபைகளுக்கு உரிமை உள்ளது' என, எட்டு நீதிபதிகள் கூறினர்; நீதிபதி நாகரத்னா மட்டும் மாறுபட்ட தீர்ப்பு அளித்தார்.
எதிர்ப்பு
இந்நிலையில், இந்த தீர்ப்பை முன்தேதியிட்டு அமல்படுத்த வேண்டும் என, பெரும்பாலான மாநிலங்கள் கோரின. ஆனால், மத்திய அரசும், குத்தகை எடுத்துள்ள நிறுவனங்கள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்களும், இதற்கு எதிர்ப்பு தெரிவித்தன.
![]() |
இதனால், ஜூலை 25ம் தேதி தீர்ப்பை அமல்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, இந்த உத்தரவை முன்தேதியிட்டு அமல்படுத்துவதா என்பது குறித்து, ஒன்பது நீதிபதிகள் அமர்வு விசாரித்தது.
இந்த விசாரணையின்போது, முன்தேதியிட்டு அமல்படுத்த, மத்திய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. கடந்த 1989ல் இருந்து அமல்படுத்தப்பட்டால், பொதுத் துறை நிறுவனங்கள் மட்டும் 70,000 கோடி ரூபாய் செலுத்த நேரிடும் என்று கூறியது.
'செயில்' எனப்படும், 'ஸ்டீல் அத்தாரிட்டி ஆப் இந்தியா' நிறுவனம், 3,000 கோடி ரூபாய் கொடுக்க நேரிடும் என வாதிட்டது.
விசாரணைகளைத் தொடர்ந்து, அமர்வு நேற்று உத்தரவு பிறப்பித்தது. அதில், கூறப்பட்டு உள்ளதாவது:
அரசியலமைப்பு சட்டத்தின் ஏழாவது அட்டவணையின் இரண்டாவது பட்டியலின், 49வது மற்றும் 50வது பிரிவுகளின் கீழ் கொடுக்கப்பட்டுள்ள விதிகளின்படி, மாநில அரசுகள் வரிகளை விதிக்கலாம்; ஏற்கனவே கொடுக்கப்பட்ட வரி நோட்டீஸ்களை புதுப்பிக்கலாம்.
முந்தைய தேதியில் இருந்து இந்த ராயல்டி மற்றும் வரியை வசூலிக்கலாம். அதே நேரத்தில், வழக்குகள் காரணமாக இத்தனை ஆண்டுகளாக மாநில அரசுகளின் வரி விதிக்கும் சட்டங்கள் அமலில் இல்லாமல் இருந்ததால், அதற்கு வட்டி அல்லது அபராதத்தை வசூலிக்க முடியாது.
அவ்வாறு வட்டி மற்றும் அபராதம் கேட்டு நோட்டீஸ்கள் கொடுக்கப்பட்டிருந்தால், அவை தள்ளுபடி செய்யப்படுகின்றன.
ஆகையால், ஜூலை 25 உத்தரவின்படி, 2005 ஏப்., 1ல் இருந்தே ராயல்டி மற்றும் வரியை மாநில அரசுகள் வசூலித்துக் கொள்ளலாம். இந்தத் தொகையை, 2026 ஏப்., 1 முதல், அடுத்த 12 ஆண்டுகளில் தவணை முறையில் வசூலிக்கலாம்.
முடிவெடுக்கலாம்
கடந்த 1989 இண்டியா சிமென்ட் வழக்கில் இருந்து, 30 ஆண்டுகளுக்கு மேலாக கால இடைவெளி உள்ளது. மேலும், உச்ச நீதிமன்றத்தில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் இருந்துள்ளது.
இதனால், இரு தரப்புக்கும் சம பலன் கிடைக்கும் வகையில், நிலுவையில் உள்ள வட்டி மற்றும் அபராதங்களை மாநில அரசுகள் தள்ளுபடி செய்ய வேண்டும்.
'மத்திய பிரதேசம், ராஜஸ்தான் போன்ற மாநிலங்கள் முன்தேதியிட்டு வசூலிக்கத் தயாராக இல்லை. உச்ச நீதிமன்றத்தின் ஜூலை 25 உத்தரவுக்குப் பிந்தைய காலத்தில் இருந்து வசூலிக்கத் தயாராக உள்ளன' என, மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு முன்தேதியிட்டு ராயல்டி மற்றும் வரியை வசூலிக்க விரும்பவில்லை என்றால், அந்தந்த மாநில சட்டசபைகள் அதற்கேற்ப முடிவுகளை எடுத்துக் கொள்ளலாம்.
அரசியலமைப்பு சட்டத்தின் ஏழாவது அட்டவணையின் இரண்டாவது பட்டியலின், 49வது மற்றும் 50வது பிரிவுகளின் கீழ், வரி வசூலிக்க சட்டசபைகளுக்கு அதிகாரம் உள்ளது. தற்போது பின்தேதியிட்டு வரி வசூலிக்க உத்தரவிட்டால், ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட மாநிலச் சட்டங்கள் செல்லுபடியாகாமல் போய்விடும். அதனால் தான், முன்தேதியிட்டு அமல்படுத்த உத்தரவிட்டு உள்ளோம்.
கடந்த 1989 மற்றும் 2004 உத்தரவுகளில், ராயல்டி மற்றும் வரி வசூலிப்பதில் சில மாறுபட்ட கருத்துகள் இருந்தன. இதனால், முந்தைய சட்டங்களை அமல்படுத்துவதில் சிக்கல்கள் எழுந்தன.
அரசியலமைப்பு சட்டத்தின்படி, சட்டசபைகள் எடுக்கும் முடிவுகள் சரியாகவே இருக்கும் என்ற பொது கருத்து உள்ளது.
மக்கள் பிரதிநிதிகள், மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற நோக்கத்திலேயே, சட்டசபைகளில் சரியான சட்டங்களை கொண்டு வருகின்றனர் என்ற கருத்தும் உள்ளது.
சட்டசபைகள் என்பது மக்களின் விருப்பத்துக்கேற்ப செயல்படுகின்றன என்பதால், அவற்றின் அதிகாரங்களை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது.
அதிகாரம்
கடந்த ஜூலை 25ல் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு என்பது, முந்தைய இரண்டு உத்தரவுகளால் ஏற்பட்ட சர்ச்சைக்கு தீர்வு காண்பதே. அந்த அடிப்படையிலும், ஏற்கனவே உள்ள சட்டங்களின்படி, முன்தேதியிட்டு நடைமுறைப்படுத்துவது தான் முறையாக இருக்கும்.
கடந்த 1989 உத்தரவுக்குப் பின், கனிமங்கள் மீதான வரிகள் மற்றும் இதர வரிகள் சட்டத்தை, மத்திய அரசு 1992ல் கொண்டு வந்தது.
அப்போது, மாநிலங்களுக்கான பங்கு முறையாக கிடைக்க வேண்டும் என்பதற்காக வரியும் உயர்த்தப்பட்டது. இதில் இருந்து மாநிலங்களுக்கு உரிய பங்கு கிடைப்பதில், மத்திய அரசும் உறுதியாக இருந்தது தெரிய வருகிறது.
இந்த அடிப்படைகளின்படியே, முந்தைய தேதியிட்டு ராயல்டி மற்றும் வரி வசூலிக்க மாநிலங்களுக்கு அதிகாரம் வழங்கியுள்ளோம். அதே நேரத்தில், அனைத்து தரப்பினரின் நலனைக் கருதி, சில நிபந்தனைகளையும் விதித்துள்ளோம்.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.