இடுக்கியில் மீண்டும் ஜீப் சவாரி கட்டுப்பாடுகளுடன் கலெக்டர் அனுமதி
இடுக்கியில் மீண்டும் ஜீப் சவாரி கட்டுப்பாடுகளுடன் கலெக்டர் அனுமதி
ADDED : ஜூலை 16, 2025 02:59 AM
மூணாறு:கேரளா இடுக்கி மாவட்டத்தில் ஜீப் சவாரி, சாகச பயணத்திற்கு இன்று முதல் கடும் கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளித்து கலெக்டர் விக்னேஸ்வரி உத்தரவிட்டார்.
இம்மாவட்டத்தில் மூணாறு உட்பட முக்கிய சுற்றுலா பகுதிகளில் ஜீப் சவாரி, சாகச பயணம் முக்கிய பொழுது போக்கு அம்சமாகும். இப் பயணம் பாதுகாப்பற்ற சூழலில் விபத்துகள் மூலம் உயிர் பலி ஏற்படுகிறது. இதனை ஒழுங்கு படுத்தும் வகையில் அவற்றிற்கு தடை விதித்து ஜூலை 5ல் கலெக்டர் உத்தரவிட்டார்.
இதற்கு எதிர்ப்பு வலுத்ததால், ஜீப் சவாரி, சாகச பயணம் கடும் கட்டுப்பாடுகளுடன் இன்று முதல் பல்வேறு கட்டங்களாக செயல்படுத்த அனுமதித்து கலெக்டர் உத்தரவிட்டார். முதல் கட்டமாக தேவிகுளம், இடுக்கி ஆகிய சப் டிவிஷன் கீழ் 9 வழித்தடங்களில் சவாரிக்கு அனுமதி அளிக்கப்பட்டது. கேரளா அட்வஞ்சர் டூரிசம் புரமோஷன் சொசைட்டியின் பாதுகாப்பு விதிமுறைகள், வழித்தடம் அடிப்படையிலான அனுமதியை கடைபிடித்து செயல்பட வேண்டும்.
வழிகள், பாதுகாப்பு ஆகியவற்றை நிபந்தனைகளுடன் செயல்படுத்துவதற்கு இடுக்கி, தேவிகுளம் சப் கலெக்டர்கள் தலைமையில் வட்டார போக்குவரத்து அதிகாரி, போலீஸ் இன்ஸ்பெக்டர், ஊராட்சி செயலர், மாவட்ட சுற்றுலா துறை செயலர் ஆகியோரை கொண்ட வழி கண்காணிப்பு, ஒழுங்குமுறை குழு அமைக்கப்பட்டது.
அக்குழு வழிகளின் தரம் குறித்து ஆய்வு நடத்தி, அவற்றில் எந்த வகை வாகனம் இயக்க வேண்டும் என அறிவுறுத்துவர். ஜீப் சவாரி, சாகச பயணம் செல்லும் வாகனங்கள் மாவட்ட சுற்றுலா துறை மூலம் பதிவு செய்யப்பட்டன.
டிரைவருக்கு லைசென்ஸ், குறைந்தபட்சம் 3 ஆண்டு அனுபவம் வேண்டும். மருத்துவ சான்றிதழ், போலீஸ் அனுமதி சான்றிதழ், வாகன தகுதி சான்று, வேக கட்டுப்பாட்டு கருவி, பயணிகளுக்கு 'சீட் பெல்ட்' உள்ளிட்டவை கட்டாயமாகும். பதிவு செய்யாத வாகனம், டிரைவர் அனுமதிக்கப்பட மாட்டார்கள். அதிகாலை 4:00 முதல் மாலை 6:00 மணிக்குள் பயணம் அனுமதிக்கப்படும்.விதிமீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.