குமாரசாமி நடத்திய கூட்டத்தில் பங்கேற்க கலெக்டருக்கு தடை! சுற்றறிக்கை அனுப்பிய காங்., அரசுக்கு கடும் கண்டனம்
குமாரசாமி நடத்திய கூட்டத்தில் பங்கேற்க கலெக்டருக்கு தடை! சுற்றறிக்கை அனுப்பிய காங்., அரசுக்கு கடும் கண்டனம்
UPDATED : ஜூலை 06, 2024 06:29 AM
ADDED : ஜூலை 06, 2024 06:19 AM

மாண்டியா: மாண்டியா கலெக்டர் அலுவலகத்தில் நேற்று, மத்திய அமைச்சர் குமாரசாமி நடத்திய மக்கள் குறைதீர் கூட்டத்துக்கு, கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் செல்ல வேண்டாம் என்று மாநில காங்., அரசு சுற்றறிக்கை அனுப்பி தடை போட்டது. இதற்கு குமாரசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மாண்டியா தொகுதி ம.ஜ.த., - எம்.பி.,யான குமாரசாமி, மத்திய கனரக தொழில் துறை அமைச்சராகவும் இருக்கிறார். இவர் நேற்று, மாண்டியா கலெக்டர் அலுவலகத்தில், மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தார்.
ஆனால், குமாரசாமி வந்த பின்னரும், கலெக்டர், அதிகாரிகள் யாரும் அங்கு வரவில்லை. இதனால், அவர் அதிருப்தி அடைந்தார்.
குமாரசாமி அளித்த பேட்டி:
மக்கள் குறை தீர்ப்பு நிகழ்ச்சிக்கு வருமாறு, கலெக்டரிடம் கூறி இருந்தேன். ஆனால், அவர் பங்கேற்க கூடாது என்று மாவட்ட நிர்வாகத்துக்கு, மாநில அரசு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.
நேற்று முன்தினம் நடந்த அமைச்சரவை கூட்டத்தில், மக்கள் தரிசனம் நடத்த முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது என்று அரசு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.
அப்படி என்றால், பெங்களூரு ரூரல் எம்.பி.,யாக இருந்த சுரேஷ், ராம்நகர் கலெக்டர் அலுவலகத்தில் இதுபோன்ற கூட்டம் நடத்தினார். மாவட்ட பொறுப்பு அமைச்சர் நடத்த வேண்டிய கூட்டங்களை, அவர் நடத்தினார். அதற்கு அனுமதி வழங்கியது யார்.
இன்று, மக்களின் குறைகளை கேட்க வந்தபோது, அதை விதிமுறைகள் மூலம் தடுத்துள்ளனர். இது என் வீட்டு நிகழ்ச்சியல்ல. இதனால், எனக்கு எந்த ஆதாயமும் கிடைக்க போவதில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக, மைசூரில் சாமுண்டீஸ்வரி தேவியை குமாரசாமி தரிசனம் செய்தார். அங்கு அவர் அளித்த பேட்டி:
இத்தனை நாட்கள் வெளிவராத எம்.யு.டி.ஏ., எனும் மைசூரு நகர மேம்பாட்டு வாரியம் ஊழல், இப்போது எப்படி வெளிவந்தது. இதற்கு பின்னணியில் இருக்கும், 'கேரக்டர்' யார் என்று எனக்கு தெரியும். முதல்வர் நாற்காலி மீது ஆசைப்பட்டவர்களால் தான் இந்த முறைகேடு அம்பலமானது.
முதல்வரின் மனைவிக்கு, 14 இடங்கள் ஒதுக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக, முதல்வரின் சட்ட ஆலோசகரும், எம்.எல்.ஏ.,வுமான பொன்னண்ணா நீண்ட நேரம் விளக்கம் அளித்தார்.
முதல்வர் சித்தராமையா, தன் மனைவி பெயரில், பல கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை எப்படி பெற்றார். அதற்கு அவர், தற்போது 62 கோடி ரூபாய் இழப்பீடு கேட்பது சரியல்ல.
வளர்ச்சி என்ற பெயரில் வாங்கப்பட்ட விவசாயிகளின் நிலத்துக்கு, உரிய இழப்பீடு இல்லாமல் தவித்து வருகின்றனர்.
முதலில் அவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். அதன்பின், அவரது மனைவி நிலத்துக்கு இழப்பீடு பெறட்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
குமாரசாமியின் குற்றச்சாட்டுக்கு, கர்நாடக பொதுப்பணித் துறை அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி ஆதரவு தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், ''மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடப்பது தொடர்பாக, அதிகாரிகளுக்கு குமாரசாமி முறையாக தகவல் கொடுத்தாரா, இல்லையா என்பது பற்றி தெரியவில்லை. எம்.பி., மட்டுமின்றி, மத்திய அமைச்சராக உள்ள குமாரசாமி அழைக்கும் கூட்டத்துக்கு, அதிகாரிகள் செல்ல வேண்டும்.
''ஆனால், போகாமல் இருந்தது சரியல்ல. எங்கள் மாவட்ட எம்.பி., ஜெகதீஷ் ஷெட்டர் கூட்டம் நடத்திய போது, மாவட்ட அதிகாரிகள் அனைவரும் சென்றிருந்தனர்,'' என்றார்.
மாண்டியாவில், மத்திய
கனரக தொழில் துறை அமைச்சர் குமாரசாமி நடத்திய மக்கள் குறைதீர்ப்பு
கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டாம் என்று அதிகாரிகளுக்கு நான் சுற்றறிக்கை
பிறப்பிக்கவில்லை. விதிமுறைகளின்படி, அதிகாரிகள் தான் சுற்றறிக்கை அனுப்பி
உள்ளனர். அவருக்கு மட்டுமல்ல, நான் எதிர்க்கட்சி தலைவராக இருந்த போது,
முன்னேற்ற ஆய்வு கூட்டம் நடத்த கூட அனுமதிக்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
துணை
முதல்வர் சிவகுமார் கூறுகையில், ''மக்கள் குறைதீர்ப்பு கூட்டம்
நடத்தட்டும். ஊர் ஊராக செல்லட்டும். யாரும் போக வேண்டாம் என்று கூறவில்லை.
அதிகாரிகள் விதிமுறைப்படி நடந்து கொள்கின்றனர். எம்.பி.,க்களிடம் எப்படி
நடந்து கொள்ள வேண்டுமோ, அப்படி அதிகாரிகள் நடந்து கொள்கின்றனர்,'' என்றார்.