ADDED : அக் 18, 2024 07:32 AM

தங்கவயல்: தங்கவயல் தாலுகாவில், தொழிலாளர் நலத்துறை அலுவலகம் திறக்கப்படாமல் இருந்ததை பார்த்து கோபம் அடைந்த கலெக்டர் அக்ரம் பாஷா, விளக்கம் கேட்டு நோட்டீஸ் கொடுக்க உத்தரவிட்டார்.
தங்கவயல் தாலுகாவின் அனைத்து துறைகளும் ஒரே இடத்தில் அமைய மினி விதான் சவுதா கட்டப்பட்டது. இங்கு தாசில்தார் அலுவலகம், தொகுதி எம்.எல்.ஏ., அலுவலகம் உட்பட பல துறைகளின் அலுவலகங்கள் உள்ளன.
அலுவலக செயல்பாடுகளை நேரில் பார்வையிட, கோலார் மாவட்ட கலெக்டர் அக்ரம் பாஷா நேற்று முன்தினம் காலை 11:00 மணிக்கு திடுமென விசிட் செய்தார். ஆவணங்கள் உள்ள அலுவலகத்தை பார்வையிட்டார். முழுமையான பாதுகாப்பு வசதிகள் உள்ளனவா என அங்குள்ள அதிகாரியிடம் கேட்டறிந்தார்.
உணவு மற்றும் பொது விநியோகத் துறை, மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை, கலால் துறை அலுவலர்களை சந்தித்து, அவர்களின் பணிகளின் விபரங்களை அறிந்தார்.
தொழிலாளர் நலத்துறை அலுவலகம் காலை 11:30 மணி வரை திறக்கப்படாமல் இருந்தது. இதனால் கோபமான கலெக்டர், விளக்கம் கேட்டு, சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். தாசில்தார் நாகவேணி உடன் இருந்தார்.
'விவசாயம், வனம், தோட்டக்கலை மற்றும் சமூக நலத்துறை அலுவலகங்கள் இன்னும் வரவில்லையே' என செய்தியாளர்கள் கேட்டதற்கு, கலெக்டர், ''நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.