லைசென்ஸ் இல்லாத ஓட்டலுக்கு பூட்டு இடுக்கி கலெக்டர் நடவடிக்கை
லைசென்ஸ் இல்லாத ஓட்டலுக்கு பூட்டு இடுக்கி கலெக்டர் நடவடிக்கை
ADDED : நவ 27, 2024 02:18 AM
மூணாறு:சபரிமலை சீசனையொட்டி சத்திரம் பகுதியில் திறக்கப்பட்டவற்றில் லைசென்ஸ் இன்றி செயல்பட்ட உணவகங்களை பூட்டுமாறு இடுக்கி கலெக்டர் விக்னேஸ்வரி உத்தரவிட்டார்.
சபரிமலையில் மண்டல, மகரவிளக்கு சீசன் துவங்கியதையடுத்து, இடுக்கி மாவட்டம் வண்டிபெரியாறு அருகில் உள்ள சத்திரத்தில் இருந்து புல்மேடு வழியாக காட்டு பாதையில் ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு நடந்து சென்று வருகின்றனர். பக்தர்களின் வசதிக்காக சத்திரம், புல்மேடு உள்பட பல பகுதிகளில் உணவகங்கள் உள்பட பல்வேறு கடைகள் திறக்கப்பட்டன.
இடுக்கி கலெக்டர் விக்னேஸ்வரி நேற்று முன்தினம் மாலை சத்திரம், புல்மேடு, சீதைகுளம் ஆகிய பகுதிகளில் உள்ள உணவகங்களில் ஆய்வு நடத்தினர். பீர்மேடு டி.எஸ்.பி. விஷால்ஜான்சன், வண்டிபெரியாறு எஸ்.ஐ., ஜெயகிருஷ்ணன் மற்றும் வனம், சுகாதாரம் உள்பட பல்வேறு துறைகளை சேர்ந்த உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.
சத்திரத்தில் உணவகங்கள் ஊராட்சி சார்பிலான லைசென்ஸ், ஊழியர்களுக்கு ஹெல்த் கார்டு ஆகியவை இன்றி செயல்பட்டன. அவற்றை தற்காலிகமாக பூட்டுமாறு ஊராட்சி, சுகாதாரதுறை ஆகியோருக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
பக்தர்களின் நலன் கருதி ஹெல்த் கார்டுகள் வைத்துள்ள மூன்று உணவகங்களை செயல்பட அனுமதித்தார். எஞ்சிய உணவகங்கள் லைசென்ஸ், ஹெல்த் கார்டு ஆகியவைகளை பெற உடனடியாக வசதி செய்து கொடுக்குமாறும், வண்டி பெரியாறு ஊராட்சி அலுவலகத்தில் லைசென்ஸ் பெற உதவி மையம் அமைக்குமாறும் உத்தரவிட்டார்.