30 ஆண்டுகளாக கான்ட்ராக்டருக்கு பில் தொகை தராத கலெக்டர் கார் 'ஜப்தி'
30 ஆண்டுகளாக கான்ட்ராக்டருக்கு பில் தொகை தராத கலெக்டர் கார் 'ஜப்தி'
ADDED : ஜூலை 20, 2025 03:39 AM

பெங்களூரு: கர்நாடக மாநிலம், பெலகாவி மாவட்டத்தைச் சேர்ந்தவர் நாராயண் கணேஷ் காமத்; அரசு ஒப்பந்ததாரர். இவர், சிறிய நீர்ப்பாசனத் துறையின் பணியை எடுத்து, சிக்கோடியில் துாத்கங்கா ஆற்றின் குறுக்கே, 1992 - 93ல் தடுப்பணை கட்டினார்.
அப்போது, சிறிய நீர்ப்பாசனத் துறை அதிகாரிகள், சிமென்ட் வினியோகிப்பதில் தாமதம் ஏற்படுத்தியதால், நாராயண் கணேஷ் தன் சொந்த செலவில் சிமென்ட் மூட்டை வாங்கி தடுப்பணை கட்டி முடித்தார்.
அணை கட்டி முடித்து இரண்டு ஆண்டுகளாகியும், அவருக்கு செலுத்த வேண்டிய பில் தொகை, 34 லட்சம் ரூபாய் விடுவிக்கப்படவில்லை.
இதையடுத்து, 'ஒப்பந்தப்படி தனக்கு பில் தொகை வழங்க வேண்டும்' என, பெலகாவி முதன்மை மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில், 1995ல் மனு தாக்கல் செய்தார். 15 முதல் 16 ஆண்டுகள் தொடர்ந்து நடந்த விசாரணைக்கு பின், பில் தொகையை விடுவிக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதற்கு எதிராக, நீர்ப்பாசனத் துறையினர் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். உயர் நீதிமன்றமும், ஆண்டுகளை கணக்கிட்டு, 9 சதவீத வட்டியுடன் 1.31 கோடி ரூபாயை ஒப்பந்ததாரருக்கு வழங்கும்படி, 2024ல் உத்தரவிட்டது. அப்போதும் நீர்ப்பாசனத் துறையினர் நிதி வழங்கவில்லை.
உயர் நீதிமன்றத்தில் மனுதாரர் மீண்டும் முறையிட்டார். நீதிமன்றம், '1.31 கோடி ரூபாயை, 50 சதவீத வட்டியுடன் ஜூன் 2ம் தேதிக்குள் வழங்க, நீர்ப்பாசனத் துறை செயலர், கலெக்டர், செயல் அதிகாரிக்கு, நடப்பாண்டில் உத்தரவிட்டது.
ஆனாலும், 'நிதியும் நிவாரண தொகையும் வழங்கவில்லை' என, மனுதாரர் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. இதையடுத்து, 'கலெக்டரின் காரை 'ஜப்தி' செய்ய வேண்டும். ஒரு வாரத்துக்குள் உரிய தொகை வழங்கவில்லை என்றால், கலெக்டர் அலுவலகம் ஜப்தி செய்யப்படும்' என, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து, கலெக்டர் அலுவலகத்துக்கு மனுதாரர் தரப்பு வக்கீல் ஜோஷி தலைமையில் நீதிமன்ற ஊழியர்கள் நேற்று முன்தினம் சென்றனர். அங்கு நிறுத்தப்பட்டிருந்த கலெக்டரின் காரை ஜப்தி செய்து, உயர் நீதிமன்றத்துக்கு கொண்டு சென்றனர்.
இதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.