தேர்வறையில் நிகழ்ந்த பயங்கரம்! மாரடைப்பால் உயிரிழந்த கல்லூரி மாணவர்
தேர்வறையில் நிகழ்ந்த பயங்கரம்! மாரடைப்பால் உயிரிழந்த கல்லூரி மாணவர்
ADDED : டிச 15, 2024 07:24 PM

மும்பை: மஹாராஷ்டிராவில் தேர்வு அறையில் எழுதிக் கொண்டிருந்த கல்லூரி மாணவர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதுபற்றிய விவரம் வருமாறு;
பீட் பகுதியில் உள்ள கல்லூரி ஒன்றில் 3ம் ஆண்டு பி.எஸ்.சி., மாணவர் சித்ஹந்த் மசல் (24) என்பவர் நேற்று முன்தினம் (டிச.13) தேர்வுக் கூடத்தில் தேர்வு எழுதிக் கொண்டு இருந்தார். மும்முரமாக தேர்வு எழுதியபடி இருந்த அவர் தாம் அசௌகரியமாக உணர்வதாக அங்கு உள்ள தேர்வுக்கூட கண்காணிப்பாளரிடம் கூறி இருக்கிறார்.
அடுத்த சில நிமிடங்களில் அங்கேயே அவர் சுருண்டு கீழே விழுந்து உள்ளார். அவருடன் தேர்வு எழுதிக் கொண்டிருந்த சக மாணவர்கள் அதிர்ச்சியில் உறைய, உடனடியாக சித்ஹந்த் மசல் மருத்துவமனைக்கு கொண்டு போகப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், மாரடைப்பு ஏற்பட்டு, ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறி உள்ளனர்.
இது கறித்து கல்லூரி முதல்வர் சிவானந்த் கிஷிர்சாகர் கூறியதாவது; தேர்வுக் கூடத்திற்கு என்சிசி ஆசிரியருடன் சென்றோம். பின்னர் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். ஆனால் அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினர் என்றார்.
உயிரிழந்த மாணவரின் சகோதரர் யாஷ் கூறுகையில், நான் தான் அவரை தேர்வு மையத்தில் பைக்கில் கொண்டு வந்துவிட்டேன். அப்போது நன்றாக தான் இருந்தார். உடலில் எந்த கோளாறும் இல்லை. சிறிதுநேரத்தில் சகோதரர் இறந்துவிட்டதாக தகவல் வருகிறது.
எனது சகோதரர் கடின உழைப்பாளி. பகுதி நேரமாக ஓரிடத்தில் வேலை பார்த்துக் கொண்டு இருந்தார். ஏழ்மையான எனது குடும்பத்துக்கு மிகவும் உதவிகரமாக இருந்தார் என்று கூறினார்.
பீட் மாவட்ட அரசு மருத்துவர் ஹனுமந்த் பார்கே கூறியதாவது; இதயத்துக்கு செல்லும் ரத்தக்குழாயில் ரத்தம் உறைந்துள்ளது. இதுவே அவருக்கு மாரடைப்பு வர காரணம் என்று தெரிகிறது. இருப்பினும், முழுமையான பிரேத பரிசோதனைக்கு பின்னரே இறப்புக்கான சரியான காரணம் என்ன என்பது தெரியவரும் என்றார்.