மைதானத்தில் கல்லூரி மாணவன் மாரடைப்பால் மரணம்; கிரிக்கெட் விளையாடிய போது சோகம்
மைதானத்தில் கல்லூரி மாணவன் மாரடைப்பால் மரணம்; கிரிக்கெட் விளையாடிய போது சோகம்
ADDED : ஏப் 05, 2025 03:22 PM

ஹைதராபாத்: ஹைதராபாத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த 21 வயது வயது இன்ஜினியரிங் கல்லூரி மாணவன், திடீர் மாரடைப்பால் சுருண்டு விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானாவின் கம்மம் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவன் வினய் குமார்,21. இவர் மேட்சல்லில் உள்ள சி.எம்.ஆர். இன்ஜினியரிங் கல்லூரியில் படித்து வந்தார். இவரது கல்லூரி சார்பில் கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டு வந்தது.
நேற்று மாலை கல்லூரி வளாகத்தில் தனது கல்லூரி நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார். பீல்டிங் நின்றிருந்த வினய் குமார் திடீரென மயங்கி கீழே விழுந்தார். அவர் மயங்கி விழுவதற்கு முன்பாக, தனது நண்பரை பார்த்து கையை அசைத்தார். ஆனால், மறுநொடியே அவர் நிலைகுலைந்து கீழே சாய்ந்தார்.
இதனால் பதறிப்போன நண்பர்கள், உடனடியாக அவரை மீட்டு அருகே உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். மேலும், மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து, வினய் குமாரின் பெற்றோருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இது குறித்து போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.