ADDED : செப் 19, 2024 11:03 PM

ஆண்களுக்கு நிகராக பெண்களும் அனைத்து விளையாட்டுகளிலும் சாதனை படைத்து வருகின்றனர். ஒரு காலத்தில் ஆண்கள் விளையாடுவதை மட்டும் விரும்பி பார்த்த ரசிகர்கள், இப்போது பெண் விளையாட்டு வீராங்கனையருக்கும் ரசிகர்களாக உள்ளனர். ஒரு காலத்தில் வெளிநாடுகளில் அதிகம் விளையாடப்பட்டு வந்த, கோல்ப் விளையாட்டு தற்போது இந்தியாவிலும் பிரபலமாகி உள்ளது.
பெங்களூரு குமாரகிருபா சாலையில் மிக பெரிய கோல்ப் மைதானம் உள்ளது. இங்கு தினமும் ஏராளமானோர் கோல்ப் விளையாடி வருகின்றனர்.
பெங்களூரைச் சேர்ந்த இளம்பெண் அதிதி அசோக், 26 கோல்ப் விளையாட்டில் அசத்தி வருகிறார். அவரது கோல்ப் பயணம் பற்றி பார்க்கலாம்.
அதிதி அசோக்கின் தந்தை அசோக். தாய் மகேஸ்வரி. அதிதிக்கு, 5 வயது இருக்கும்போதே கோல்ப் விளையாட்டில் அவருக்கு ஆர்வம் ஏற்பட்டது. கோல்ப் விளையாட வேண்டும் என்று பெற்றோரிடம் கூறினார்.
பெற்றோரும் மகள் ஆசையை நிறைவேற்ற நினைத்தனர். கர்நாடக கோல்ப் அசோசியேஷனில் பயிற்சிக்கு சேர்த்து விட்டனர்.
கடந்த 2012 ம் ஆண்டில் இருந்து தேசிய அளவிலான கோல்ப் போட்டிகளில் விளையாடினார்.
கடந்த 2012, 2013, 2014ம் ஆண்டுகளில் தொடர்ச்சியாக தேசிய ஜூனியர் கோல்ப் போட்டியில் சாம்பியன்ஷிப் வென்று அசத்தினார். கிரிக்கெட் விளையாட்டில் அதிக கவனம் செலுத்தும் இந்தியாவில் இருந்து, கோல்ப் விளையாட்டில் இளம்பெண் அசத்துகிறார் என்று, அதிதி அசோக்கை பற்றி மற்ற நாடுகள் பேச ஆரம்பித்தன.
பிரேசில் ரியோ டி ஜெனிராவில் கடந்த 2016ல் நடந்த, கோடைக்கால ஒலிம்பிக்கில் கலந்து கொண்ட, இளம் வீராங்கனை என்ற பெருமையை பெற்றதுடன், அந்த ஒலிம்பிக்கில் 41வது இடத்தையும் பிடித்து அசத்தினார்.
கடந்த 2020 ல் நடந்த, கோடைக்கால ஒலிம்பிக்கில் 4 வது இடம் பிடித்து, அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.
லேடீஸ் ஐரோப்பிய சுற்றுப்பயணம் மற்றும், பெண்கள் தொழில்முறை கோல்ப் சங்கம் சார்பில் நடக்கும் போட்டிகளில் பங்கேற்று வருகிறார்.
லேடீஸ் ஐரோப்பிய சுற்றுப்பயணத்தில் ஐந்து முறையும், மற்ற சுற்றுப்பயணத்தில் இரண்டு முறையும் வெற்றி பெற்று உள்ளார். அவரது வெற்றி பயணம் தொடரட்டும்
- நமது நிருபர் -.