வாங்க... பா.ஜ.,வில் சேருங்க சுதாகரனுக்கு பத்மஜா அழைப்பு
வாங்க... பா.ஜ.,வில் சேருங்க சுதாகரனுக்கு பத்மஜா அழைப்பு
ADDED : மார் 15, 2026 02:02 AM

திருச்சூர்: கேரள காங்கிரஸ் மூத்த தலைவரும், கண்ணுார் எம்.பி.,யுமான சுதாகரன், 77, கட்சி தலைமை மீது அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படும் நிலையில், பா.ஜ.,வில் இணையும்படி, அவருக்கு அக்கட்சியின் மூத்த தலைவரான பத்மஜா வேணுகோபால் அழைப்பு விடுத்துள்ளார்.
கேரளாவில் மார்க்.கம்யூ., கட்சியைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு மொத்தமுள்ள, 140 சட்டசபை தொகுதிகளுக்கு தமிழகத்துடன் சேர்த்து விரைவில் தேர்தல் நடக்கிறது.
இதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இந்த தேர்தலில், ஆளும் கூட்டணிக்கும், காங்., தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது.
'சட்டசபை தேர்தலில் எம்.பி.,க்களாக இருப்பவர்கள் போட்டியிடக் கூடாது' என, காங்., மேலிடம் உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், அக்கட்சியின் மூத்த தலைவரும், கண்ணுார் எம்.பி.,யுமான கே.சுதாகரன் அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது.
காங்கிரசில் இருந்து விலகி, சமீபத்தில், பா.ஜ.,வில் இணைந்த, மறைந்த காங்., மூத்த தலைவர் கே.கருணாகரனின் மகள் பத்மஜா வேணுகோபால், நேற்று கூறியதாவது:
என்னை ஓரங்கட்டியது போலவே சுதாகரனையும் ஓரங்கட்ட காங்., முயற்சிக்கிறது. இது எனக்கு எந்த ஆச்சரியத்தையும் அளிக்கவில்லை. காங்கிரசின் பாணியே இது தான். நல்ல தலைவர்களை அக்கட்சி மதிப்பதில்லை; மரியாதை கொடுப்பதும் இல்லை.
சுதாகரன் போன்ற தலைவர்கள் பா.ஜ.,வில் இணைவது காலத்தின் கட்டாயம். எங்கு சென்றாலும் அவருக்கு போட்டியிட வாய்ப்பு கிடைக்கும். வரும் தேர்தலில், திருச்சூர் தொகுதியில், பா.ஜ., வேட்பாளராக நான் போட்டியிடுவேன்.
காங்கிரசில் இருந்த போது கிடைக்காத நம்பிக்கை தற்போது பா.ஜ.,வில் கிடைத்துள்ளது. மக்கள் ஆதரவோடு திருச்சூரில் நான் வெற்றி பெறுவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
