ஷிண்டே குறித்து அவதுாறு; நகைச்சுவை பேச்சாளருக்கு சம்மன்
ஷிண்டே குறித்து அவதுாறு; நகைச்சுவை பேச்சாளருக்கு சம்மன்
ADDED : மார் 26, 2025 01:07 AM

மும்பை : மஹாராஷ்டிரா துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே குறித்து அவதுாறாக பேசிய நகைச்சுவை பேச்சாளர் குணால் கம்ராவை விசாரணைக்கு ஆஜராகும்படி போலீசார் நோட்டீஸ் அளித்துஉள்ளனர்.
மஹாராஷ்டிராவில், முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையில், பா.ஜ., சிவசேனா, தேசியவாத காங்.,கின் மஹாயுதி கூட்டணி ஆட்சி நடக்கிறது. இதில், சிவசேனா தலைவர் ஏக்நாத் ஷிண்டே துணை முதல்வராக உள்ளார்.
உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சியை இரண்டாக உடைத்து, கட்சியை கைப்பற்றிய துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை துரோகி என விமர்சித்து, நகைச்சுவை பேச்சாளர் குணால் கம்ரா சமீபத்தில் பேசினார்.
மும்பை கர் என்ற இடத்தில் உள்ள, 'ஹாபிடட் ஸ்டூடியோ' என்ற இடத்தில் நடந்த மேடை நிகழ்ச்சியில், சிவசேனா மற்றும் தேசியவாத காங்., கட்சிக்குள் தற்போது ஏற்பட்டுள்ள பிளவுகள் குறித்தும் கிண்டலாக பேசினார்.
இது, சிவசேனா தொண்டர்கள் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. நிகழ்ச்சி நடந்த ஹாபிடட் ஸ்டூடியோ சூறையாடப்பட்டது.
குணால் கம்ராவை விசாரணைக்கு ஆஜராகும்படி நோட்டீஸ் அளிக்க அவரது வீட்டுக்கு போலீசார் சென்றனர். அவர் வீட்டில் இல்லை. அவர் மஹாராஷ்டிராவை விட்டு வெளியேறி விட்டதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து மஹாராஷ்டிரா துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே நேற்று கூறியதாவது: பேச்சு சுதந்திரம் தேவைதான். எங்களுக்கும் நையாண்டி புரியும். ஆனால், அதற்கு ஒரு வரைமுறை உள்ளது. குணால் கம்ரா பேசுவதை பார்த்தால், சிலருக்கு எதிராக பேச அவர் யாருடனோ ஒப்பந்தம் போட்டது போல் தெரிகிறது.
இதே நபர் உச்ச நீதிமன்றம், பிரதமர், செய்தியாளர் அர்னாப் கோஸ்வாமி மற்றும் சில தொழிலதிபர்கள் குறித்து அவதுாறாக பேசியுள்ளார். இதற்கு பெயர் பேச்சு சுதந்திரம் அல்ல. யாருக்காகவோ அவர் இப்படியெல்லாம் பேசுகிறார் என்றே அர்த்தம். இவ்வாறு அவர் கூறினார்.