சிறந்த ஆளுமைகளின் பாரம்பரியத்தை கவுரவிப்பதில் உறுதி; பிரதமர் மோடி
சிறந்த ஆளுமைகளின் பாரம்பரியத்தை கவுரவிப்பதில் உறுதி; பிரதமர் மோடி
ADDED : டிச 24, 2025 08:34 PM

புதுடில்லி: நாட்டின் சிறந்த ஆளுமைகளின் பாரம்பரியத்தை கவுரவிப்பதிலும், பாதுகாப்பதிலும் நமது அரசு உறுதிபூண்டுள்ளது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 101வது பிறந்தநாளை முன்னிட்டு, உத்தர பிரதேச மாநிலம் லக்னோவிற்கு நாளை ( டிசம்பர் 25 ) பிரதமர் மோடி வருகை தருகிறார். லக்னோவின் புறநகரில் உள்ள ஹார்டோய் சாலையில் கோமதி நதிக்கரைக்கு அருகில் 65 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள, வாஜ்பாய், ஷ்யாமா பிரசாத் முகர்ஜி மற்றும் தீன் தயாள் உபாத்யாயா ஆகியோருக்கு அர்ப்பணிக்கப்பட்ட ராஷ்ட்ர பிரேர்ண ஸ்தல் நினைவிடத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.
ரூ.230 கோடி செலவில் கட்டப்பட்டு, 65 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள இந்த நினைவிடத்தில், சியாமா பிரசாத் முகர்ஜி, பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா மற்றும் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆகியோரின் 65 அடி உயர வெண்கல சிலைகள் உள்ளன. இதுகுறித்து பிரதமர் மோடி சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: நாட்டின் சிறந்த ஆளுமைகளின் பாரம்பரியத்தை கவுரவிப்பதிலும், பாதுகாப்பதிலும் நமது அரசு உறுதிபூண்டுள்ளது.
அந்த வகையில், நாளை பிற்பகல் 2:30 மணியளவில், முன்னாள் பிரதமர் பாரத ரத்னா அடல் பிஹாரி வாஜ்பாயின் 101வது பிறந்தநாளை முன்னிட்டு லக்னோவில் 'ராஷ்ட்ர பிரேர்ண ஸ்தலத்தை' திறந்து வைக்கும் பாக்கியம் நமக்குக் கிடைக்கும்.
வாஜ்பாய், டாக்டர் ஷ்யாமா பிரசாத் முகர்ஜி மற்றும் பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா ஆகியோரின் பிரமாண்டமான வெண்கல சிலைகள் இங்கு நிறுவப்பட்டுள்ளன. தேசத்தைக் கட்டியெழுப்புவதில் இந்த தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைவர்களின் விலைமதிப்பற்ற பங்களிப்புகளைப் பற்றி அறிய ஒரு அதிநவீன அருங்காட்சியகமும் உருவாக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.

