பொது சிவில் சட்ட மசோதா குஜராத் சட்டசபையில் தாக்கல்
பொது சிவில் சட்ட மசோதா குஜராத் சட்டசபையில் தாக்கல்
ADDED : மார் 25, 2026 02:38 AM

காந்திநகர்: குஜராத்தில், யு.சி.சி., எனப்படும், பொது சிவில் சட்ட மசோதாவை, சட்டசபையில் மாநில அரசு தாக்கல் செய்தது.
குஜராத்தில் முதல்வர் பூபேந்திர படேல் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது.
திருமணம், விவாகரத்து, வாரிசுரிமை, தத்தெடுப்பு உள்ளிட்ட தனி நபர் உரிமைகள் தொடர்பாக, அந்தந்த மதத்திற்கு ஏற்ப தனி சட்டங்கள் உள்ளன.
இவற்றை, அனைவருக்கும் ஏற்ப பொது சிவில் சட்டமாக கொண்டு வர குஜராத் அரசு முயற்சித்து வருகிறது.
இதன்படி, உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையிலான ஐந்து பேர் அடங்கிய நிபுணர் குழுவை, கடந்த ஆண்டு மாநில அரசு நியமித்தது. இந்த குழு பல்வேறு தரப்பின் கருத்துகளை அறிந்து, மாநில அரசிடம் தன் அறிக்கையை சமீபத்தில் அளித்தது.
இதையடுத்து, சட்ட சபையில் நேற்று நடந்த பட்ஜெட் கூட்டத் தொடரில், 'குஜராத் பொது சிவில் சட்டம், 2026' என பெயரிடப்பட்ட மசோதாவை முதல்வர் பூபேந்திர படேல் தாக்கல் செய்தார்.
இந்த மசோதாவில், மற்றவருடன் சேர்ந்து வாழும் உறவை பதிவு செய்யவும்; விவாகரத்து பெறவும் வழிவகை செய்யப்படும்.
இதேபோல் இரண்டாவது திருமணத்தை தடை செய்வதுடன், கணவரோ அல்லது மனைவியோ உயிரிழந்தால் மட்டுமே, இந்தச் சட்டத்தின் கீழ் மறுமணம் செய்ய வழிவகை செய்யப்படும் எனவும் குறிப்பிடப்பட்டு உள்ளது.
இந்த சட்டம் அமல் படுத்தும்பட்சத்தில், மாநிலம் முழுதும் விரிவுப்படுத்தப்படுவதுடன், மற்ற மாநிலங்களிலோ அல்லது வெளிநாடுகளிலோ வசிக்கும் குஜராத் மக்களுக்கும் பொருந்தும்.
பொது சிவில் சட்டத்தை, உத்தரகண்ட் அரசு 2024ல் சட்டசபையில் நிறைவேற்றியது. குஜராத்தில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தும் இரண்டாவது மாநிலம் என்ற பெருமையை பெறும்.
