மத்தியப் பிரதேசத்தில் பொது சிவில் சட்ட மசோதா நிறைவேற்றம்
மத்தியப் பிரதேசத்தில் பொது சிவில் சட்ட மசோதா நிறைவேற்றம்
ADDED : ஜூலை 21, 2026 04:43 PM

போபால்: மத்தியப் பிரதேச சட்டசபை பொது சிவில் சட்ட மசோதாவை நிறைவேற்றி உள்ளது என மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ் தெரிவித்து உள்ளார்.
மத்திய பிரதேசத்தில் முதல்வர் மோகன் யாதவ் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, சட்டசபை கூட்டத்தொடர் நடந்து வருகிறது. திருமணம் செய்த தம்பதிக்கு பிறக்கும் குழந்தைகள், தத்தெடுக்கப்படும் குழந்தைகள், வாடகைத்தாய் மூலம் பிறக்கும் குழந்தைகள் என அனைவருக்கும் சமமான அளவு சட்ட உரிமை வழங்க பரிந்துரை செய்யும் பொது சிவில் சட்ட மசோதா சட்ட சபையில் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
அம்மாநில முதல்வர் மோகன் யாதவ் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது என்று அறிவித்துள்ளார். இந்த மசோதா பலதார மணத்துக்கு தடை விதிக்கிறது. மூன்று முறை 'தலாக்' சொல்லி விவாகரத்து தரும் முஸ்லிம்களின் முத்தலாக்கை குற்றமாக கருதுகிறது.
திருமணம் செய்யாமல் லிவ் - இன் முறையில் சேர்ந்து வாழ்வோர் அதை ஒரு மாதத்திற்குள் பதிவு செய்யாவிட்டால் மூன்று மாதம் சிறை தண்டனை விதிக்கவோ அல்லது 10,000 ரூபாய் அபராதம் விதிக்கவோ பொது சிவில் சட்ட மசோதா பரிந்துரைக்கிறது.
ஏற்கனவே, உத்தராகண்ட் மற்றும் குஜராத், அசாம் ஆகிய மாநிலங்கள் பொது சிவில் சட்ட மசோதாவைச் சட்டசபையில் நிறைவேற்றியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
