ADDED : ஜன 25, 2025 05:56 PM

டேராடூன்: உத்தரகண்ட் மாநிலத்தில் ஜன.,27ல் பொது சிவில் சட்டம் அமலுக்கு வருகிறது.
வெவ்வேறு மதங்களை சேர்ந்தவர்களுக்கு, அவரவர் மத நடைமுறைகளின் அடிப்படையில் திருமணம், விவாக ரத்து, சொத்துரிமை, தத்து எடுப்பது, ஜீவனாம்சம் தொடர்பான சட்டங்கள் தற்போது அமலில் உள்ளன.
இதை மாற்றி, அனைத்து மதத்தினருக்கும் ஒரே பொது சிவில் சட்டமாக இருக்க வேண்டும் என்பது நீண்ட காலமாக இருந்து வரும் கோரிக்கை. அதன் அடிப்படையில் பா.ஜ., ஆளும் உத்தரகண்ட் மாநிலத்தில் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
இது குறித்து உத்தரகண்ட் மாநில தலைமை செயலாளர் ஷைலேஷ் பகவுலி கூறியதாவது:
பிரதமர் மோடி வரும் 28ம் தேதி உத்தரகண்ட் வருகிறார். அவர் வருவதற்கு ஒரு நாள் முன்னதாக, மாநிலத்தில் ஜன.,27ல் பொது சிவில் சட்டம் அமல் செய்யப்படுகிறது.
இதையொட்டி, பொது சிவில் சட்டத்துக்கான இணைய தளத்தை முதல்வர் தொடங்கி வைக்கிறார். சுதந்திர இந்தியாவில், பொது சிவில் சட்டத்தை அமல் செய்யும் முதல் மாநிலமாக உத்தரகண்ட் இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.