டாக்டர்களுடன் உள்ள தொடர்பு: அல் பலாஹ் பல்கலை விளக்கம்
டாக்டர்களுடன் உள்ள தொடர்பு: அல் பலாஹ் பல்கலை விளக்கம்
ADDED : நவ 12, 2025 03:37 PM
பரிதாபாத்: '' டில்லி செங்கோட்டை அருகே நடந்த பயங்கரவாத தாக்குதல் நெட்வொர்க்கில் ஈடுபட்ட டாக்டர்களுடன் பணி நிமித்தம் தவிர வேறு எந்த தொடர்பும்இல்லை,'' என அவர்கள் பணியாற்றிய அல்பலாஹ் பல்கலை விளக்கம் அளித்துள்ளது.
ஹரியானாவில் 2,900 கிலோ வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்ட டாக்டர்கள் முஸாமில் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த பெண் டாக்டர் ஷாஹீன் சையத் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள், ஹரியானா மாநிலம் பரிதாபாத்தில் உள்ள அல் பலாஹ் பல்கலையில் மருத்துவ கல்லூரி விரிவுரையாளராகவும், டாக்டர் ஆகவும் பணியாற்றி வருகின்றனர்.தற்போது டில்லி கார் குண்டுவெடிப்பு சம்பவத்திலும் இவர்களுக்கு தொடர்புள்ளது.
இச்சூழ்நிலையில், அல் பலாஹ் பல்கலை துணைவேந்தர் பூபேந்தர் கவுர் ஆனந்த் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: துரதிர்ஷ்டவசமான நடந்த சம்பவத்தால் ஆழ்ந்த அதிர்ச்சியும், கவலையும் அடைந்துள்ளோம். அதற்கு கண்டனம் தெரிவிக்கிறோம். இந்த சோகமான நிகழ்வால் பாதிக்கப்பட்டுள்ள அப்பாவி மக்கள் நினைவாக எங்களது எண்ணங்கள் உள்ளது. அவர்களுக்காக பிரார்த்தனை செய்கிறோம். இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட டாக்டர்கள், பல்கலையில் பணியாற்றியவர்கள் என்பதைத் தவிர, அவர்களுக்கும் , கல்வி நிறுவனத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
பல்வேறு கல்வி மற்றும் தொழில்முறை படிப்புகளை எங்கள் பல்கலை நடத்தி வருகிறது. மேலும், 2019 முதல் எம்பிபிஎஸ் இளங்கலை மாணவர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறது. எங்கள் நிறுவனத்தில் பயிற்சி பெற்று பட்டம் பெற்ற டாக்டர்கள் தற்போது இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள புகழ்பெற்ற மருத்துவமனைகள் மற்றும் நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர்.
சில தளங்களில் கூறப்படுவது போல், பல்கலைக்கழக வளாகத்திற்குள் எந்த ரசாயனமோ அல்லது பொருளோ பயன்படுத்தப்படவோ சேமிக்கப்பப்படவோ, கையாளப்படவோ இல்லை. பல்கலை ஆய்வகங்கள், மருத்துவ மாணவர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட படிப்புகள் மற்றும் பயிற்சி தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன.அனைத்து தவறான மற்றும் அவதூறான குற்றச்சாட்டுகளை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். அதனை திட்டவட்டமாக மறுக்கிறோம். பல்கலை தொடர்பாக எந்தவொரு அறிக்கையை வெளியிடுவதற்கு அல்லது பகிர்வதற்கு முன்னர் அனைத்து அமைப்புகளும் தனிநபர்களும் பொறுப்புடன் செயல்படவும், உண்மையை சரிபார்க்க வேண்டும்.இவ்வாறு அந்த அறிக்கையில் அந்த கூறப்பட்டுள்ளது.

