ADDED : மார் 20, 2025 11:56 PM
புதுடில்லி: சமூக வலைதள உள்ளடக்கங்களை முடக்குவதற்கு சட்டவிரோதமான வழிமுறைகளை மத்திய அரசு கையில் எடுப்பதாக, 'எக்ஸ்' நிறுவனம் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது.
அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்கிற்கு சொந்தமான, 'எக்ஸ்' சமூகவலைதளத்தில், அந்நிறுவனத்தின், 'க்ராக்' என்ற, செயற்கை நுண்ணறிவு தேடுபொறி உள்ளது.
இது பிரதமர் மோடி மற்றும் லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் குறித்து கடுமையான விமர்சனங்களை சமீபத்தில் முன்வைத்தது.
ஹிந்தியில் சில மோசமான வார்த்தைகளையும் வெளிப்படுத்தியது. இது சர்ச்சையான நிலையில், 'எக்ஸ்' நிறுவனத்திடம் மத்திய அரசு விளக்கம் கேட்டுள்ளது.
இந்நிலையில் சமூக வலைதளங்களை கட்டுப்படுத்த மத்திய அரசு இயற்றிய தகவல் தொழில்நுட்ப சட்டங்கள் ஏற்கனவே அமலில் உள்ளன.
இதில், சமூக வலைதளங்களை கண்காணிப்பது, ஆட்சேபனைக்குரிய உள்ளடக்கங்களை நீக்குவது தொடர்பாக விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்கிற்கு சொந்தமான, 'எக்ஸ்' சமூக வலைதள நிறுவனம், மத்திய அரசுக்கு எதிராக கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. அதன் விபரம்:
தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் போன்ற சில குறிப்பிட்ட காரணங்களுக்காக மறு ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டிய உள்ளடக்கங்களை முடக்க, இந்திய அரசின் தகவல் தொழில்நுட்ப சட்டப்பிரிவு 69ஏ அனுமதி அளிக்கிறது.
இதன் அடிப்படையிலேயே, சமூக வலைதள உள்ளடக்கங்கள் முடக்கப்பட்டு வருகின்றன.
இதற்கு நேர்மாறாக, முறையான சோதனையின்றி உள்ளடக்கங்களை அதிகாரிகள் முடக்குவதற்கான அதிகாரத்தை சட்டப்பிரிவு 79 - 3பி அளிக்கிறது. மேலும், இந்த பிரிவின் கீழ் உள்ளடக்கங்கள் முடக்கப்பட்டால் அது சமூக வலைதள நிறுவனத்துக்கான சட்டப் பாதுகாப்பை தளர்த்துகிறது.
இந்த நடைமுறை, இந்தியாவில் அதிகப்படியான தணிக்கைக்கு வழிவகுக்கும் அபாயம் உள்ளது.
இது, எங்கள் நிறுவனத்தின் மீதான பயனர்களின் நம்பிக்கையை குலைத்து வர்த்தகத்தை கேள்விக்குள்ளாக்குகிறது.
மேலும், இந்திய சைபர் குற்ற ஒருங்கிணைப்பு மையம் நடத்தும், 'சாயோக்' இணையதளத்தில் சமூக வலைதள நிறுவனங்கள் இணைய வேண்டும் என, மத்திய அரசு வற்புறுத்துகிறது.
இதுபோன்ற தணிக்கை அமைப்புகளை உருவாக்குவதற்கோ, அதற்கு சிறப்பு அதிகாரிகளை நியமிக்கும்படி எங்களை வற்புறுத்தவோ, அதில் இணைய வேண்டும் என எங்களை கட்டாயப்படுத்தவோ, எந்த சட்ட அடிப்படையும் இல்லை.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.