அரசின் நடவடிக்கையில் உடன்பாடில்லை: எதிர்ப்பு காட்டும் 'எக்ஸ்' நிறுவனம்
அரசின் நடவடிக்கையில் உடன்பாடில்லை: எதிர்ப்பு காட்டும் 'எக்ஸ்' நிறுவனம்
ADDED : பிப் 22, 2024 09:57 PM

புதுடில்லி :விவசாயிகள் போராட்டத்துடன் தொடர்புடைய சமூக வலைதள கணக்குகளை தற்காலிகமாக முடக்கும்படி மத்திய அரசு பிறப்பித்துள்ள உத்தரவில் உடன்பாடில்லை என, 'எக்ஸ்' நிறுவனம் தெரிவித்துள்ள நிலையில், நம் நாட்டில், ஜனநாயக படுகொலை நடப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றஞ்சாட்டி உள்ளது.
பஞ்சாப், ஹரியானா, உத்தர பிரதேசத்தில் இருந்து டில்லி நோக்கி விவசாயிகள் நடத்தி வரும் பேரணியுடன் தொடர்புடைய 177 சமூக வலைதள கணக்குகளை
தற்காலிகமாக முடக்கும்படி, 'எக்ஸ்' நிறுவனத்துக்கு மத்திய அரசு உத்தரவிட்டது.
இது தொடர்பாக, மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் அனுப்பியுள்ள நோட்டீஸ் குறித்து, 'எக்ஸ்' நிறுவனம் அறிக்கை ஒன்றை
வெளியிட்டுள்ளது.
அதன் விபரம்:
சில குறிப்பிட்ட எக்ஸ் கணக்குகளை தற்காலிகமாக முடக்கும்படி மத்திய அரசு எங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியது. அந்த உத்தரவுக்கு மதிப்பளித்து, அந்த கணக்குகளை இந்தியாவில் மட்டும் முடக்கி உள்ளோம்.
மத்திய அரசின் நடவடிக்கையில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. அந்த பதிவுகளுக்கும் கருத்து சுதந்திரம் அளிக்கப்பட வேண்டும். அரசின் உத்தரவை எதிர்த்து நீதிமன்றத்தில் மனு அளித்து இருப்பதால் அது குறித்து மேற்கொண்டு பேச முடியவில்லை. அந்த உத்தரவின் நகலையும் வெளியிட முடியவில்லை.
தன்னிச்சையான முடிவு ஆனால் அவற்றை வெளியிடுவது அவசியம் என கருதுகிறோம்.
இல்லாவிட்டால் தன்னிச்சையான முடிவுகள் எடுக்கப்படுவதை தடுக்க முடியாது.
இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.எக்ஸ் நிறுவனத்தின் இந்த அறிக்கையை தன் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள காங்., பொது செயலர் ஜெய்ராம் ரமேஷ், நாட்டில் ஜனநாயக படுகொலை நிகழ்ந்துள்ளதாக குற்றஞ்சாட்டினார்.