ADDED : மார் 02, 2024 01:04 AM
சண்டிகர்:ஹரியானா மாநிலத்தில், லோக்சபா தேர்தலில் களம் இறங்கும் வேட்பாளர்களை மாநில பா.ஜ., தேர்தல் ஆலோசனைக் குழுவில் முடிவு செய்து, டில்லி தலைமைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ஹரியானா மாநில பா.ஜ., தலைவர் நயாப் சிங் சைனி தலைமையில், மாநில தேர்தல் குழு ஆலோசனைக் கூட்டம் நேற்று முன் தினம் நடந்தது. முதல்வர் மனோகர் லால் கட்டார், ஹரியானா மாநில பா.ஜ., பொறுப்பாளர் பிப்லப் குமார் தேப் மற்றும் மூத்த தலைவர்கள் பங்கேற்றனர்.
ஹரியானாவில் 10 லோக்சபா தொகுதிகள் உள்ளன. தற்போதைய எம்.பி.,க்களைத் தவிர, கட்சியின் மூத்த தலைவர்களான குல்தீப் பிஷ்னோய், அபிமன்யு, யோகேஷ்வர் தத், அசோக் தன்வார், மறைந்த ரத்தன் லால் கட்டாரியா மனைவி பான்டோ கட்டாரியா, ஓ.பி.தங்கர் மற்றும் விபுல் கோயல் ஆகியோரும் இம்முறை களம் இறக்கப்படுவர் என தெரிகிறது.
கடந்த 2019ல் நடந்த தேர்தலில் ஹரியானாவில் உள்ள 10 லோக்சபா தொகுதிகளையும் பா.ஜ., கைப்பற்றியது.
அதில், அம்பாலா தொகுதி எம்.பி.,யாக இருந்த ரத்தன் லால் கட்டாரியா கடந்த ஆண்டு மரணம் அடைந்தார். எனவே, அந்த தொகுதி மட்டும் இன்று வரை காலியாகவே உள்ளது.
அதேநேரத்தில், 2019ல் நடந்த சட்டசபைத் தேர்தலில், மொத்தம் 90 தொகுதிகளைக் கொண்ட ஹரியானாவில் பா.ஜ.,வுக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. எனவே, ஜனநாயக ஜனதா கட்சியுடன் கூட்டணி வைத்து ஆட்சி அமைத்தது. ஆனால், வரும் லோக்சபா தேர்தலில் பா.ஜ., மற்றும் ஜனநாயக ஜனதா கட்சி ஆகிய இரண்டுமே தனித்தனியாகவே போட்டியிட திட்டமிட்டுள்ளன.
ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின், பா.ஜ., மூத்த தலைவர் அபிமன்யு கூறியதாவது:
லோக்சபா தேர்தலில் கடந்த முறை 10 தொகுதிகளையும் கைப்பற்றினோம். அதேபோல இந்த தேர்தலிலும் நரேந்திர மோடியை மீண்டும் பிரதமராக்க ஹரியானா மக்கள் முடிவு செய்துள்ளனர். இங்கு 10 தொகுதிகளையும் பா.ஜ., தக்கவைத்துக் கொள்ளும்.
இவ்வாறு அவர் கூறினார்.

