ADDED : பிப் 20, 2025 02:14 AM
பத்தனம்திட்டா : கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்தில் பள்ளிக்கல் கிராமம் உள்ளது. இங்கு, ராதாகிருஷ்ண குரூப், என்ற முதியவர் வசித்து வருகிறார். இவருக்கு பக்கத்து வீட்டில் அனில்குமார் என்பவர் வசித்து வருகிறார்.
இருவரும் பரஸ்பர நட்புடன் பழகி வந்த நிலையில், சேவல் ஒன்றால் அந்த நட்பு முறிந்துள்ளது. அனில்குமார் வீட்டில் வளர்க்கப்படும் சேவல் தினந்தோறும் அதிகாலை 3:00 மணிக்கு கூவும். இந்த சேவலால், ராதாகிருஷ்ணனின் துாக்கம் கலைவதும் தொடர்கதையாக இருந்தது. இது குறித்து அனில்குமாரிடம் முறையிட்டும் பலனில்லை.
இதையடுத்து, சேவல் கூவுவதால் தன் துாக்கம் கெடுவதாக கூறி, அரூர் வருவாய் வளர்ச்சி அதிகாரி அலுவலகத்தில் ராதாகிருஷ்ணன் புகாரளித்தார்.
இது தொடர்பாக ராதாகிருஷ்ணன் மற்றும் அனிலுடன் அதிகாரிகள் பேச்சு நடத்தினர்.
பின்னர், அனில்குமார் வீட்டில் ஆய்வு செய்தனர். அங்கு மேல்தளத்தில் வளர்க்கப்பட்டு வரும் சேவல் கூவுவதையும், இதனால் ராதாகிருஷ்ணன் துாக்கம் கெடுவதையும் அவர்கள் உறுதி செய்தனர்.
இதையடுத்து, மேல்தளத்தில் வளர்க்கப்படும் சேவலை, அடுத்த 14 நாட்களுக்குள் வீட்டின் தெற்கு மூலைக்கு மாற்ற அதிகாரிகள் உத்தரவிட்டனர்.