திரைப்பட வர்த்தக சபையில் நடிகர் தர்ஷன் மீது புகார்
திரைப்பட வர்த்தக சபையில் நடிகர் தர்ஷன் மீது புகார்
ADDED : பிப் 22, 2024 06:58 AM

பெங்களூரு: தயாரிப்பாளரை மிரட்டியது தொடர்பாக, நடிகர் தர்ஷன் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கன்னட திரையுலகின், ஸ்டார் நடிகர்களில் ஒருவர் தர்ஷன். கோடிக்கணக்கான ரசிகர்களை வைத்துள்ளார். இவர் நாயகனாக நடித்த, காடேரா திரைப்படம் சமீபத்தில் திரைக்கு வந்தது. வெற்றிகரமாக ஓடுகிறது. இந்த படத்தை தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் தயாரித்துள்ளார்.
இந்நிலையில், தயாரிப்பாளர் உமாபதி ஊடகத்தினர் முன்னிலையில், காடேரா படத்தின் கதையை எழுதியது நான். டைட்டில் வைத்தது நான். படம் நன்றாக வந்துள்ளது. என்னால் இந்த படத்தை தயாரிக்க முடியவில்லை,” என கூறியிருந்தார்.
பெங்களூரின் பிரசன்னா திரையரங்கில், நேற்று முன் தினம் காடேரா படத்தின், 50வது நாள் கொண்டாட்டம் நடந்தது. இதில் தர்ஷன் பேசுகையில், “சிலர், கதை என்னுடையது, டைட்டில் என்னுடையது என்கின்றனர்.
கதை உன்னுடையது என்றால், நல்ல கதையை ஏன் விட்டு விட்டாய்? உன் முடிவு சிறப்பானது என்றால், நீயே அந்த கதையை படமாக்கியிருக்கலாமே? ஆதாரம் இல்லாமல் பேசக்கூடாது. ஆதாரத்தை வைத்துக்கொண்டு பேச வேண்டும். ஏனப்பா என்னிடமே வந்து குத்து வாங்குகிறாய்,” என, தயாரிப்பாளர் உமாபதிக்கு பதிலடி கொடுத்திருந்தார்.
இதுதொடர்பாக, பிரஜாபரா வேதிகே என்ற அமைப்பு, திரைப்பட வர்த்தக சபையில் நேற்று புகார் அளித்தது. 'தயாரிப்பாளர் உமாபதியை, நடிகர் தர்ஷன் மிரட்டியுள்ளார். ஆட்சேபத்துக்குரிய வகையில் பேசியுள்ளார். அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்' என, புகாரில் கூறப்பட்டுள்ளது.